Published : 10 Jun 2018 09:20 AM
Last Updated : 10 Jun 2018 09:20 AM

கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு பெறாத முகேஷ் அம்பானி

உலகின் 19-வது பெரிய பணக்காரரும், 4000 கோடி டாலர் சொத்துக்கு அதிபதியும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்(ஆர்ஐஎல்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு எதுவும் பெறவில்லை என தெரியவந்துள்ளது. மேலாண்மைப் பதவியில் இருப்பவர்கள் அதிக அளவில் ஊதியம் பெறக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ கடந்த 10 ஆண்டுகளாக அவர் ஊதிய உயர்வு பெறாமல் உள்ளார்.

2009-ம் ஆண்டிலிருந்து முகேஷ் அம்பானி மொத்தமாக பெறக்கூடிய ஆண்டு ஊதியம் ரூ.15 கோடியாக உள்ளது. தலைமைச் செயல் அதிகாரிகளின் ஊதியம் குறித்து விவாதங்கள் எழுந்துவரும் நிலையில் முகேஷ் அம்பானி தானாக முன்வந்து ஊதிய உயர்வு பெறாமல் இருக்கிறார். இருப்பினும் டிவிடெண்ட்களின் வழியாகவே இதை விட 100 மடங்கு அதிக தொகை அவருக்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானி தொடர்வதற்கான அனுமதியை பங்குதாரர்களிடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கோரியிருக்கிறது. 61 வயதான முகேஷ் அம்பானி 1977-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து வருகிறார். அவரது தந்தை திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு 2002-ம் ஆண்டு ஜூலை மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவராக முகேஷ் அம்பானி நியமிக்கப்பட்டார். வரும் ஜூலை-5 அன்று நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக பங்குதாரர்களிடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் 2019-ம் ஆண்டு ஏப்ரல்-19க்குப் பிறகும் முகேஷ் அம்பானி பதவியில் தொடர்வார் என முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

முகேஷ் அம்பானிக்கு ஆண்டு ஊதியமாக ரூ.4.17 கோடியும், இதர படிகளாக 50 லட்சமும் வழங்கப்படும் என பங்குதாரர்களிடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்திருக்கிறது. நிகர லாபத்தின் அடிப்படையிலான போனஸ், வணிக பயணங்களுக்கு ஆகும் செலவு, கார் செலவு போன்றவையும் நிறுவனத்தால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு செலவிடப்படும் தொகை மொத்த ஊதியத்தில் சேர்க்கப் படவில்லை.

அம்பானியின் மனைவி நீடா அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அன்றாட அலுவல்கள் இல்லாத இயக்குநராக இருந்து வருகிறார். இதற்காக இவருக்கு ரூ.6 லட்சம் வழங்கப்படுகிறது. அம்பானியின் உறவினர்களான நிஹில் ஆர் மேஸ்வானி மற்றும் ஹிதல் ஆர் மேஸ்வானிக்கு வழங்கப்படும் தொகை தலா ரூ.19.99 கோடி யாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-2017 காலகட்டத்தில் இது தலா ரூ.16.58 கோடியாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x