

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ-வாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு, ஜியோ நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்தது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ முக்கிய இடத்தைப் பிடித்தது.
தற்போது இந்தியாவில் ஜியோ 48 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. இந்நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 33 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பொதுப் பங்கு வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜியோவைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனமும் பொதுப் பங்கு வெளியீடு மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் அந்நிறுவனத்துக்கு 3,000 சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன.
சமீப ஆண்டுகளில் டிஜிட்டல், தொலைத்தொடர்பு, ரீடெய்ல் வணிகங்களை விரிவாக்கம் செய்ய முகேஷ் அம்பானி கே கே ஆர், ஜெனரல் அட்லாண்டிங், அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 25 பில்லியன் டாலர் நிதி திரட்டினார். இதன் தொடர்ச்சியாக ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகிய இருநிறுவனங்களும் ஐபிஓ மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் 270 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் 12.58 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளன.