

மும்பை: டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9-ம் தேதி மும்பையில் உடல்நலக் குறைவால் காலமானர். டாடா அறக்கட்டளை தலைவராக பல ஆண்டுகாலம் ரத்தன் டாடா செயல்பட்டு வந்தார். அவருக்கு வாரிசு கிடையாது. இதையடுத்து அவரது ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நோயல் டாடா கடந்த 40 ஆண்டுகாலமாக டாடா குழுமத்தில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். மேலும் டாடா அறக்கட்டளை நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.
டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது டாடா சன்ஸ் இயக்குநராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் டாடா சன்ஸின் 3-வது இயக்குநராக அவர் இடம்பிடிக்கிறார். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, டாடா அறக்கட்டளை, டாடா சன்ஸ் ஆகிய இரு அமைப்பின் இயக்குநர் குழுவிலும் ஒரே நபர் இடம்பிடிப்பது இதுவே முதன்முறை.
டாடா சன்ஸ் கீழ் விமான சேவை, வாகன தயாரிப்பு, நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல்கள் என 30 நிறுவனங்கள் உள்ளன. டாடா சன்ஸ் குழுமத்தில் டாடா அறக்கட்டளை 66 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கிறது.