

புதுடெல்லி: பண்டிகை கால கார் விற்பனை இந்தாண்டு மந்த நிலையில் இருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி கார் விற்பனையானது எப்போதும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மந்தநிலையில் உள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் முதலே கார் விற்பனை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையுள்ள கார் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. கரோனா பேரிடருக்குப் பிறகு விற்பனை வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இப்பிரிவின் பங்களிப்பானது மிக முக்கியமானதாக உள்ளது.
மேலும், கார் விநியோகஸ்தர்களிடம் இதுவரை இல்லாத வகையில் ரூ.79,000 கோடி மதிப்பிலான 7.90 லட்சம் வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதாக புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது, 80-85 நாட்கள் விற்பனைக்கான வாகன வரத்துக்கு சமமானதாகும்.
வானிலை மாற்றம் காரணம்: வானிலையில் காணப்படும் தீவிர மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் முடிவை தள்ளிவைத்துள்ளது. மேலும், மாருதி சுஸுகியின் ஃப்ரான்க்ஸ் மற்றும் டாடா அண்மையில் அறிமுகப்படுத்திய கர்வ் போன்ற புதிய மாடல்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு குறைந்து காணப்படுவதும் விற்பனை மந்த நிலைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.