Published : 05 Jun 2018 09:27 AM
Last Updated : 05 Jun 2018 09:27 AM

ஆன்லைன் ராஜா 29: உங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலியே?

ஜா

க் மா எதைச் செய்தாலும், அதில் முன்னேற்பாடு இருக்கும். இப்போதும் அப்படித்தான். சந்திப்புக்கு முன்பாக, மாஸா பற்றிய விவரங்களைத் திரட்டினார். ஜப்பான் நாட்டில் கொரியத் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். உயரம் ஐந்து அடிக்குக் கொஞ்சம் அதிகம். பெரிய நெற்றி. சீனர்களுக்கு இது புத்திசாலித்தனத்தின் அடையாளம். தனக்காவது வீட்டில் அப்பா, அம்மாவுக்கு முறையே போட்டோகிராபர் தொழிலும், தொழிற்சாலை வேலையும் இருந்தன. கஞ்சியோ, கூழோ, மூன்றுவேளை சாப்பாடு நிச்சயம். மாஸா குடிசையில் பிறந்து வளர்ந்தவர். அப்பா பன்றிகள் வளர்த்துக் கசாப்புக் கடைகளுக்கு வியாபாரம் செய்தவர். இந்த வருமானம் போதாமல் கள்ளச் சாராயம் காய்ச்சுதல். வறுமை, கொரியப் பின்னணி ஆகியவற்றால், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களால் கேலி செய்யப்பட்டார். யாரும் விளையாட்டுகளில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். தனிமை, தனிமை.

கோடிக் கோடியாகப் பணம் சேர்த்து உலகத்தைத் தன் காலடியில் விழவைக்கவேண்டும் என்று நெஞ்சில் கொழுந்து விட்டெரியும் ஆசைத் தீ. பதினாறு வயதில் அமெரிக்காவுக்கு ஓடிப்போனார். பள்ளிப் படிப்பை முடித்தார். புகழ்பெற்ற பெர்க்லி பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்புக்குச் சேர்ந்தார். படிப்பைவிடத் தொழில் முனைவில் ஆர்வம். அவர் முதலில் அமெரிக்கா வந்தபோது, ஆங்கிலம் சரியாகத் தெரியாமல் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் திண்டாடினார். இந்த அனுபவத்தால், சீனம், ஜப்பான் போன்ற மொழிகளை ஆங்கிலத்தில் பெயர்க்கும் கருவியைக் கண்டுபிடித்தார். விமான நிலையங்களில் இவற்றை நிறுவினால், பயணிகளுக்கு உதவும் என்னும் இலக்கோடு பல எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளைத் தொடர்பு கொண்டார். ஜப்பானின் பிரபல ஷார்ப் எலெக்ட்ரானிக்ஸ் (Sharp Electronics) இந்தத் தொழில்நுட்பத்தை 5 லட்சம் டாலர்களுக்கு வாங்கினார்கள். இருபதுகளில் இருந்த இளைஞருக்கு பம்பர் லாட்டரி.

1980. ஜப்பான் திரும்பினார். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் விற்பனை ஆரம்பித்தார். தொட்டதெல்லாம் பொன். பத்தே வருடங்களில் கம்பெனி வருமானம் 3,000 மில்லியன் டாலர்கள். ஸாஃப்ட் பேங்க் (Soft Bank) என்னும் துணிகர முதலீட்டு நிறுவனம் தொடங்கினார். தொழில்முனைவோர்களை எடை போடுவதில் கில்லாடி. 1994 – இல் ஜெர்ரி யாங் யாஹூ தொடங்கினார். முதலீடு செய்யப் பலர் தயங்கினார்கள். அந்தத் தங்கச் சுரங்கத்தை முதலில் அடையாளம் கண்டுகொண்டவர் மாஸா.* எளிதில் யாரையும் சந்திக்கமாட்டார். கூட்டாவின் சிபாரிசில்தான் தன்னைப் பார்க்கிறார் என்று ஜாக் மாவுக்குத் தெரியும். அதே சமயம், ஜாக் மாவிடம் கொஞ்சம் கூடத் தாழ்வு மனப்பான்மை இல்லை. தானும் வருங்கால மாஸா என்னும் உறுதி.

*(மாஸாவின் கெட்டிக்காரத்தனத்துக்கு அண்மை உதாரணம் - பிளிப்கார்ட் கம்பெனியில் ஏப்ரல் 2017 – இல் 2.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து 20 சதவீதப் பங்குகளை வாங்கினார். அந்தப் பங்குகளை இப்போது வால்மார்ட்டுக்கு 4 பில்லியன் டாலர்களுக்கு விற்கப்போகிறார். ஒரே வருடத்தில் 1.5 பில்லியன், அதாவது 60 சதவீத லாபம். மாஸா, பூர்வ ஜென்மத்தில் நீங்கள் மைதாஸ் மன்னராக இருந்தீர்களா? )

மாஸா வீடு. இல்லை, பிரம்மாண்ட மாளிகை. இன்டர்நெட் தொழில் முனைவோர்கள் பலர் வரவேற்பறையில் காத்திருந்தார்கள். போனவுடன், ஜாக் மா உடனே உள்ளே அழைக்கப்பட்டார். மாஸா ஆடம்பரமான கோட் சூட் போட்டிருப்பார் என்று நினைத்த ஜாக் மாவுக்கு ஏமாற்றம். சாதாரண பான்ட், டை இல்லாமல் பழைய கோட் மட்டும். அவருக்கு முன்னால் பெரிய டி.வி. ஸ்க்ரீன். அலிபாபாவின் இணையப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தது. ``இந்த ஆள் சாதாரணமானவரில்லை. தன்னைப்பற்றி எக்கச்சக்க ஹோம் ஒர்க் செய்திருப்பார்” என்று ஜாக் மா மனதில் பிரமிப்பு

ஜாக் மா உட்கார்ந்தவுடன் மாஸா சொன்னார், “உங்களுக்குச் சரியாக 20 நிமிடங்கள் தருகிறேன். உங்கள் வருங்காலத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள்.”

ஜாக் மா உணர்ச்சிப் பிரவாகமாகப் பேசத் தொடங்கினார். அவர் மனதில் ஆசை - இருபது நிமிடங்கள் மிகக் குறைவான நேரம். தன் கனவுகளை விளக்கப் போதவே போதாது. இவர் சும்மா சொல்கிறார். தன் பேச்சில் மயங்கி ஒரு மணி நேரமாவது பேச விடுவார்.

மாஸாவின் ஒரு கண் ஜாக் மா மேல். இன்னொரு கண் கைக்கடிகாரத்தில். சரியாக ஆறு நிமிடம். மாஸா கையை உயர்த்தினார். ``ஸ்டாப்.”

ஜாக் மாவுக்கு எரிச்சல், இவர் பெரும் பணக்காரர்தான். அதற்காகத் தன் பேச்சை அரைகுறையாக நிறுத்தச் சொல்வதா? என்ன பணக்கொழுப்பு?

``ஜாக் மா. உங்களுக்கு என்னிடமிருந்து எவ்வளவு பணம் வேண்டும்?”

ஜாக் மா எரிச்சலில் பதில் சொன்னார். “எனக்குத் தேவையான மொத்தப் பணமும் நேற்றைக்கே கிடைத்துவிட்டது. உங்கள் காசு எனக்குத் தேவையில்லை.”

“பிறகு என்னை ஏன் பார்க்க விரும்பினீர்கள்?”

அழைத்துவரச் சொல்லவில்லை அரசே, இழுத்துவரச் சொன்னீர்கள் என்று மனோகரா சினிமாவில் சிவாஜி டயலாக் விடுவாரே, அதே பாணியில் ஜாக் மா கொடுத்தார் பதில்.

“இந்தச் சந்திப்பு நான் கேட்டதல்ல. நம் இருவருக்கும் பொது நண்பரான கூட்டா, நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். அந்த மரியாதைக்காகத்தான் வந்தேன்.”

அலிபாபாவின் பிசினஸ் மாடல், லாப நஷ்டக் கணக்குகள் மாஸா விரல் நுனியில். ஜெயிக்கும் குதிரை என்று தெரிந்தது. அதே சமயம், பணம் தேவைப்படும்போதும், தலை குனியாத ஜாக் மாவின் திமிர் அவருக்குப் பிடித்தது. இந்தச் சுயமரியாதைக்காரர்கள் பிசினஸில் தோற்கவே மாட்டார்கள். விடக்கூடாது இவரை.

ஜாக் மா எழுந்து வெளியே போகப் புறப்பட்டார். மாஸா அவரை உட்காரச் சொன்னார்.

“நான் உங்கள் கம்பெனியில் 30 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்கிறேன். 50 சதவீதப் பங்குகள் தாருங்கள்.”

ஜாக் மாவுக்கு அதிர்ச்சி. இவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே? பேச்சை முழுவதும் கேட்காமல் நிறுத்தச் சொல்கிறார். அந்த அரைகுறை விளக்கத்தின் அடிப்படையில் 30 மில்லியன் தருகிறார். எவ்வளவு பெரிய தொகை அது? மனக்கணக்குப் போட்டார்.

“மாஸா, எங்களுக்கு 30 மில்லியன் வேண்டாம். 20 மில்லியன் போதும். 40 சதவீதப் பங்குகள் தருகிறோம்.”

குறைவான தொகை போதும் என்று சொல்லும் தொழில் முனைவோரை மாஸா இதுவரை பார்த்ததேயில்லை. சிறிது நேரத்துக்கு முன்னால், ஜாக் மாவுக்கு வந்த அதே சந்தேகம் இப்போது குபேரருக்கு - இவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலியே? ஆள் கொஞ்சம் லூஸோ?

இருவருக்கும் விசித்திரமான வாக்குவாதம். 20 மில்லியன் டாலர்களிலிருந்து ஒரு டாலர்கூட அதிகம் வாங்கிக்கொள்ள ஜாக் மா சம்மதிக்கவில்லை. டீல் முடிந்தது. கடன் பெற்றவர் விடைபெற்றுக்கொண்டார். கொடுத்தவரும், வாங்கியவரும் அடுத்தவர் மனங்களில் இமயங்களாக உயர்ந்து நின்றார்கள்.

ஜாக் மா மனதில் தங்கள் சந்திப்பு பற்றிப் பல கேள்விக்குறிகள். நட்பு நெருக்கமான பல வருடங்களுக்குப் பின் ஒரு நாள் மாஸாவிடம் கேட்டார்,``உங்களை லூஸ் ஆசாமி என்று பலர் சொல்கிறார்கள். எனக்கும் இன்டஸ்ட்ரியில் கிறுக்கன் என்றுதான் பெயர். யாஹூ தொடங்கியவுடன், 100 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தீர்கள். அலிபாபாவில் ஆறே நிமிடங்களில் 20 மில்லியன் போட முடிவெடுத்தீர்கள். எப்போதுமே உங்கள் கணிப்புகள் கரெக்ட். இதன் ரகசியம் என்ன?”

மாஸா மனம் திறந்தார். “கம்பெனியின் பிசினஸ் திட்டங்களைவிட, நிறுவனம் தொடங்கும் தொழில் முனைவோரின் நேர்மை, ஜெயிக்கும் வெறி மிக முக்கியம். முதலில் சந்திக்கும்போதே என் மனதில் அவரைப் பற்றிய நல்லெண்ணம், நம்பிக்கை வரவேண்டும். ஜெர்ரி யாங் கண்களில் அந்த வெறியை, திறமையைப் பார்த்தேன். 100 மில்லியன் போட்டேன். நீங்கள் வித்தியாசமான, பைத்தியக்காரத் தொழில் அதிபர் என்று கேள்விப்பட்டேன். இப்படிப்பட்டவர்களை எனக்குப் பிடிக்கும். உங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்தேன். உங்கள் கண்களில் கனவுகள் தெரிந்தன. உற்சாகம் பளிச்சிட்டது. என்னைப்போலவே நீங்களும் லூஸ் ஆசாமி என்று புரிந்துகொண்டேன். இதற்கு மேல் எனக்கு வேறு எதுவுமே தேவைப்படவில்லை. இருவர் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்றுதான் உங்கள் பேச்சை ஆறே நிமிடங்களில் நிறுத்தினேன்.”

ஜாக் மா சொன்னார், ``எனக்கு இப்போது புரிகிறது. பிசினஸில் ஜெயிக்கப் பிரம்மாண்டக் கனவுகள், ஜெயிக்கும் வெறி, யுக்தி, கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் என நான்கும் தேவை.”

மாஸா சம்மதத்தோடு தலை அசைத்தார்.

ஜாக் மாவுக்கு இன்னொரு கேள்வி.

``அப்போது அலிபாபா மிகச் சிறிய கம்பெனி. எதை நம்பி 20 மில்லியன் முதலீடு செய்தீர்கள்?”

``அப்போது, சீனாவின் எல்லா ஆன்லைன் கம்பெனிகளும் யாஹூவின் அமெரிக்க யுக்திகளைக் காப்பி அடித்துக்கொண்டிருந்தார்கள். நீங்கள் ஒருவர் மட்டுமே, சீனக் கலாச்சாரத்துக்கும், மக்களின் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமான வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறீர்கள். இந்த வழியில் லாபம் வரத் தாமதமாகலாம். ஆனால், சீன மண்ணுக்கேற்ற உங்கள் செயல்பாடுதான் நீடித்த வெற்றி தரும் என்று கணக்குப் போட்டேன். ஜெர்ரி யாங், பில் கேட்ஸ் போல நீங்களும் புதிய பாதை போட்டவர்.”

ஜனவரி 2000. மாஸாவின் 20 மில்லியன் டாலர்கள் ஜாக் மா கைகளில். அலிபாபா தொடங்கிப் பத்தே மாதங்களில், 60,000 டாலர்களோடு தொடங்கிய கம்பெனியில் 250 லட்சம் டாலர்கள். ஊக்கமருந்து சாப்பிட்டவர்போல், ஜாக் செயல்பாட்டில் ஸ்பீட், ஸ்பீட்.

மனிதன் நினைப்பதுண்டு, வாழ்க்கையே வசந்தமென்று. இறைவன் சிரிப்பதுண்டு, பாவம் மனிதனென்று. மாஸாவுக்கும், ஜாக் மாவுக்கும் அப்போது தெரியாது, இன்டர்நெட் உலகத்தைச் சீக்கிரமே ஒரு சுனாமி சுழற்றி அடிக்கப்போகிறது என்று. (குகை இன்னும் திறக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x