தீபாவளி: டெல்லி, மும்பைக்கு கோவையில் இருந்து விமானத்தில் பறந்த 3 டன் இனிப்புகள்!

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து மும்பை, டெல்லிக்கு கடந்த ஐந்து நாட்களில் 3 டன் எடையிலான இனிப்புகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் அதிகபட்சமாக 30 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன.

கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி, வார்ப்படம், பொறியியல் பொருட்கள், உணவு பொருட்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் விமான நிலைய வளாகத்தில், 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 150 டன், வெளிநாட்டு பிரிவில் 800 டன் மற்றும் அதற்கு மேல் என சராசரியாக ஆயிரம் டன் எடையிலான சரக்குகள் கையாளப்படுகின்றன. பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட சில பொருட்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகம் அனுப்பப்படும். தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து டெல்லி, மும்பைக்கு கடந்த சில நாட்களாக அதிக இனிப்புகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “டெல்லி, மும்பைக்கு கடந்த 5 நாட்களில் 3 டன் எடையிலான இனிப்பு வகைகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஷார்ஜா, அபுதாபி விமானங்களில் குறிப்பிடத்தக்க அளவு இனிப்புகள் அனுப்பப்படவில்லை. சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது.

தினமும் ஒரு டன் எடையிலான சரக்கு கொண்டு செல்லப்படும். அவற்றில் பெரும்பாலும் உணவு பொருட்களாக இருக்கும். தற்போதும் அதே நிலை தொடர்கிறது. பொங்கல் பண்டிகைக்கு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு விமானங்களில் அனுப்பி வைக்கப்படும். தீபாவளிக்கு உள்நாட்டு பிரிவில் மட்டும் இனிப்புகள் குறிப்பிடத்தக்க அளவு கையாளப்பட்டுள்ளன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in