கார்ப்பரேட் பவர் நிறுவன மோசடி வழக்கு: ரூ.500 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

கார்ப்பரேட் பவர் நிறுவன மோசடி வழக்கு: ரூ.500 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
Updated on
1 min read

புதுடெல்லி: மகாராஷ்டிராவைத் தலைமையிட மாகக் கொண்ட கார்ப்பரேட் பவர் நிறுவனம் போலி ஆவணங்களைக் காட்டி 2009 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் ரூ.4,037 கோடி கடன் பெற்றதாகவும், அந்தக் கடன்களை போலி நிறுவனங்கள் மூலம் மடைமாற்றியதாகவும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா புகார் அளித்தது. வட்டியோடு சேர்த்து அந்நிறுவனத்தின் கடன் பாக்கி ரூ.11,379 கோடியாக உள்ளது என்று குறிப்பிட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் 2022-ம் ஆண்டு அந்நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதையடுத்து அமலாக்கத் துறையும் இந்த மோசடி விவகாரத்தை விசாரிக்க ஆரம்பித்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி ரூ.220 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. இந்நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மனோஜ் ஜெயஸ்வால், அபிஜித் ஜெயஸ்வால், அபிஷேக் ஜெயஸ்வால் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

250 போலி நிறுவனம்.. - வங்கியிலிருந்து பெற்ற கடனை 250 போலி நிறுவனங்கள் மூலம் மடைமாற்றி மோசடி செய்துள்ளதாக கார்ப்பரேட் பவர் நிறுவனம் மீது அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in