ஒரு பவுன் தங்கம் ரூ.59,000; கடும் விலை உயர்வால் தீபாவளிக்கு நகை வாங்குவோர் அதிர்ச்சி

ஒரு பவுன் தங்கம் ரூ.59,000; கடும் விலை உயர்வால் தீபாவளிக்கு நகை வாங்குவோர் அதிர்ச்சி
Updated on
1 min read

சென்னை: தங்கம் விலை பவுன் ரூ.59 ஆயிரம் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால், தீபாவளிக்கு நகை வாங்க திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. ஆனால், இந்த விலை குறைவு நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகித்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் 25-ம் தேதி பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.56,480-க்கு விற்பனையானது. பின்னர், இம்மாதம் 21-ம் தேதி ஒரு பவுன் ரூ.58,400-க்கும், 23-ம் தேதி ஒரு பவுன் ரூ.58,720-க்கும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இதன்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7,375-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.59,000-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.63,040-க்கு விற்பனையானது.

தீபாவளி பண்டிகை நேரத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்வதைக் கண்டு நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், “சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் செய்தமுதலீட்டை வெளியே எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. மேலும், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தைஅதிகளவில் வாங்கி குவித்து வருகின்றன. மேலும், தீபாவளி பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு ஆபரணத் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in