தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.59,000-க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் தங்கம் விலை பவுன் ரூ.59,000-க்கு விற்பனை. இன்று (அக்.29) பவுனுக்கு ரூ.480 என உயர்ந்துள்ளது. இது தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. அப்போது ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.
இருப்பினும் அதன் பின்னர் தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
இன்று (அக்.29) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,375-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.59,000-க்கு விற்பனை ஆகிறது.
