இந்திய நிதி உதவியுடன் இலங்கையில் 5,000 வழிபாட்டு தலங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் 

கொழும்பில் உள்ள  ஹோகந்தரா பௌத்த விகாரைக்கு வழங்கப்பட்ட சோலார் பேனல்.
கொழும்பில் உள்ள  ஹோகந்தரா பௌத்த விகாரைக்கு வழங்கப்பட்ட சோலார் பேனல்.
Updated on
2 min read

ராமேசுவரம்: இந்தியாவின் ரூ.143 கோடி நிதி உதவியின் மூலம் இலங்கையில் உள்ள 5,000 வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 400 கோடி டாலர் மதிப்பிலான உதவியை இந்திய வழங்கி உள்ளது. மேலும், இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி திட்டத்தின் கீழ் அந்நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்த கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், இந்திய அரசின் 17 மில்லியன் டாலர் (சுமார் ரூ.143 கோடி) நிதியுதவியில், இலங்கையின் மின்சார வாரியம் மற்றும் இலங்கை புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையுடன் இணைந்து இலங்கையில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட சோலார் பேனல்.
கொழும்பில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட சோலார் பேனல்.

முதற்கட்டமாக கொழும்பில் உள்ள ஹோகந்தரா பௌத்த விகாரை, ஆஞ்சநேயர் கோயில், புனித அந்தோணியார் தேவாலயம், முட்வல் ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு 5 கிலோ வாட் சோலார் பேனல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை மின்சார வாரியம், மற்றும் இலங்கை புதுப்பிக்கவல்ல எரிசக்திதுறை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த திட்டத்தின் மூலம், இலங்கையில் உள்ள இந்து கோயில்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பௌத்த விகாரைகள் என 5,000 வழிபாட்டுத் தலங்கள் பயன்பெறும்.

கொழும்பில் உள்ள முட்வல் ஜும்மா பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட சோலார் பேனல்.
கொழும்பில் உள்ள முட்வல் ஜும்மா பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட சோலார் பேனல்.

2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 5,000 வழிபாட்டுத் தலங்களுக்கும் சோலார் பேனல்களை பொறுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்துக்கும் தலா 5 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் பொறுத்தப்படுகிறது. இதன் மூலம் 5 ஆயிரம் வழிபாட்டு தலங்களிலிருந்தும் 25 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.

கொழும்பில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழங்கப்பட்ட சோலார் பேனல்.
கொழும்பில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு வழங்கப்பட்ட சோலார் பேனல்.

இந்த சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழிபாட்டுத் தலங்களின் உபயோகத்திற்குப் போக எஞ்சிய மின்சாரத்தை இலங்கை மின்சார வாரியத்திற்கு சேர்த்துக் கொள்ளப்படும். அதாவது ஆண்டிற்கு சுமார் 3.7 கோடி யூனிட் மின்சாரம் இலங்கை மின்சார வாரியத்திற்கு கிடைக்கும், என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மாசு இல்லாத சுத்தமான எரிசக்தி இலங்கையின் மாற்றத்தை வலுப்படுத்தும். மேலும், வழிபாட்டுத் தலங்களின் மின்சார செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in