

வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லாவுக்கு நடப்பு ஆண்டில் ரூ.665 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 63% அதிகம் ஆகும். இதில் பெரும் பகுதி பங்குகளாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மைக் ரோசாஃப்ட் மென்பொருளில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்' என்ற சைபர் செக்யூரிட்டி பிரச்சினை ஏற்பட்டது. இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் தளங்கள் முடங்கின. இந்தப் பிரச்சினை காரணமாக தனக்கான ஊதியத்தை குறைத்து வழங்கும்படி சத்ய நாதெல்லா கோரி இருந்தார். எனினும், அவருக்கு முந்தைய ஆண்டை விடவும் அதிக அளவில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியினரான சத்ய நாதெல்லா, 2014-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு நிறுவனத்தில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏஐ உருவாக்கம் சார்ந்து முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காகவும், 2022-ம் ஆண்டில் 68 பில்லியன் டாலர் மதிப்பில் அக்டிவிஷன் பிலிஷார்டு நிறுவனத்தை கையப்படுத்தியதற்காகவும் அவரது ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித் துள்ளது.