

மும்பை: மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் சைரஸ் பூனாவாலின் சொத்து மதிப்பு ரூ.2.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய பில்லியனர்கள் பட்டியலில் பூனாவாலா 9-வது இடத்தில் உள்ளார்.
பூனாவாலா 1966-ம் ஆண்டு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தைத் தொடங்கினார். போலியோ உட்பட பல்வேறு தடுப்பு மருந்துகளை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆண்டுக்கு 150 கோடி போலியோ டோஸ்களை தயாரிக்கும் சீரம், தடுப்பு மருந்துத் தயாரிப்பில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக விளங்குகிறது. கரோனா காலகட்டத்தில் இந்தியாவில் கோவிட்ஷீல்ட் தாயாரிப்பை சீரம் நிறுவனம் மேற்கொண்டது.
தடுப்பு மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சைரஸ் பூனாவாலாவின் பங்களிப்புக்காக மத்திய அரசு அவருக்கு 2022-ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 2015-ம் ஆண்டு சைரஸ் பூனாவாலா மும்பை ப்ரீச் கேண்டி பகுதியில் ரூ.750 கோடி மதிப்பில் மாளிகை ஒன்றை வாங்கினர். இந்திய ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக மதிப்பில் வாங்கப்பட்ட சொத்தாக இது உள்ளது. தற்போது சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சைரஸ் பூனாவாலின் மகன் ஆதார் பூனாவாலா உள்ளார்.