

சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் சுதிர் குமார் ஜெயினை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்திருக்கிறது. லஞ்சப் புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் இன்னும் ஐந்து நபர்கள் இந்த புகார் மீது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு கடன் சலுகைகளை நீட்டிப்பதற்கு லஞ்சம் கேட்டதாக எஸ்.கே.ஜெயின் மீது வழக்கு புதிவு செய்திருக்கிறது சிபிஐ. பெங்களூரு, போபால், மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 20க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 50 லட்சம் ரூபாய்வரை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து சோதனை செய்யப் பட்டு வரும் சூழ்நிலையில் பல ஆவணங்களும் சிக்கி இருப் பதாக தெரிகிறது. வங்கித்துறையில் 26 ஆண்டு கால அனுபவம் மிக்கவர் இவர். 1987-ம் ஆண்டு வங்கிப் பணிக்கு வந்தார். சி.ஏ. முடித்தவர். கடந்த வருடம் ஜுலை 8-ம் தேதி சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.