

மும்பை: பங்குச்சந்தைகள் இன்றைய (புதன்கிழமை) வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ் 299.59 புள்ளிகள் சரிந்து 79,921.13 ஆக இருந்தது. அதேபோல் நிஃப்டி 93.95 புள்ளிகள் சரிந்து 24,378.15 ஆக இருந்தது. கடந்த ஆகஸ்ட் 16க்குப் பிறகு சென்செக்ஸ் 80,000க்கு கீழாக சென்றது இதுவே முதல் முறை.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம், இந்தாண்டின் இரண்டாவது காலாண்டின் பலவீனமான காலாண்டு வருவாய் போன்றவை காரணமாக பங்குச்சந்தைகள் மந்த போக்குக்கினைச் சந்தித்தன.
நீண்ட காலமாக மிகையாக மதிப்பிடப்பட்ட இந்தியப் பங்குகள், மிகவும் கூர்மையான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு, யதார்த்த நிலைக்கு திரும்புகின்றன. இந்த மாதம் முழுவதும் நிகழ்ந்துள்ள வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தால் இவை நிகழ்ந்துள்ளன என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டெழுந்த பங்குச்சந்தை: இதனிடையே ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் வர்த்தகத்தின் போது பங்குச்சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன. காலை 10 மணியளவில், சென்செக்ஸ் 139.72 புள்ளிகள் உயர்ந்து 80,351.44 ஆகவும், நிஃப்டி 28.75 புள்ளிகள் உயர்ந்து 24,500.85 ஆகவும் இருந்தது.
உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் கொள்முதல் மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் நிலவிய உறுதியான போக்குள் இந்த மாற்றத்துக்கு வழி வகுத்தன.
மும்பை பங்குச்சந்தையை பொறுத்தவரை பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்ட்லே, கோடாக் மகேந்திரா பேங்க், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் மாருதி பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.
என்டிபிசி, பவர் கிர்டு, மகேந்திரா அண்ட் மகேந்திரா மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் சரிவில் இருந்தன.
செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் 930.55 சரிந்து 80,220.72 ஆகவும், நிஃப்டி 309 புள்ளிகள் சரிந்து 24,472.10 ஆகவும் நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.