

புதுடெல்லி: அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு ஏழு புதிய சேவைகளும் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள நான்கு டெலிகாம் நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கியது. இந்தச் சூழலில் நிறுவனத்தின் இயக்கத்தில் புது பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு, மலிவான கட்டணம் மற்றும் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு ஏழு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், பிஎஸ்என்எல் ஐபிடிவி, டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி, பைபர் டு தி ஹோம் பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை, என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ், நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க் போன்றவை இதில் அடங்கும். இதில் ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் மூலம் பயனர்கள் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க வழிவகுக்கிறது. டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி மூலம் பயனர்கள் தடையில்லா நெட்வொர்க் இணைப்பை சாட்டிலைட் மற்றும் நிலத்தில் உள்ள மொபைல் நெட்வொர்குகள் மூலம் பெறலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.