கரண் ஜோஹரின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் 50% பங்குகளை வாங்கும் ஆதார் பூனாவல்லா
மும்பை: கரண் ஜோஹரின் சினிமா தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸின் 50 சதவீத பங்குகளை ஆதார் பூனாவல்லாவின் செரின் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்குகிறது. இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு ரூ.1,000 கோடி.
இருதரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் படி தர்மா புரொடக்ஷன்ஸில் தலா 50 சதவீத பங்குகளை கரண் ஜோஹர் மற்றும் ஆதார் பூனாவல்லா ஆகியோர் கொண்டிருப்பார்கள். கரண் ஜோஹர் தயாரிப்பு நிறுவனத்தின் செயல் தலைவராக செயல்படுவார். அபூர்வா மேத்தா, சிஇஓ-வாக செயல்படுவார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இந்திய எண்டர்டெயின்மென்ட் துறை குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில் தர்மா மற்றும் செரின் நிறுவனம் இணைந்து பார்வையாளர்களுக்கு சுவையான படைப்புகளை தயாரித்து, வெளியிட உள்ளது என இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரண் ஜோஹர், ஆதார் பூனாவல்லா என இருவரும் இந்த கூட்டணியை மனதார வரவேற்றுள்ளனர்.
கடந்த 1976-ல் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை கரண் ஜோஹரின் தந்தை யஷ் ஜோஹர் நிறுவினார். குச் குச் ஹோதா ஹே, கபி அல்விதா நா கெஹ்னா, ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், குட் நியூஸ் மற்றும் பிரம்மாஸ்திரா போன்ற படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீரம் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவன சிஇஓ மற்றும் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனத்தின் தலைவராகவும் ஆதார் பூனாவல்லா உள்ளார்.
