

புதுடெல்லி: டெல்லியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வெங்காய விலையைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து வெங்காயத்தை ரயில் மூலம் கொண்டு வர முடிவு செய்தது.
இதையடுத்து 57 லாரிகளுக்கு சமமான அளவில், 1,600 டன் வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிராவிலிருந்து கிளம்பிய கண்டா எக்ஸ்பிரஸ் நேற்றுமுன்தினம் டெல்லியை அடைந்தது. மராத்தியில் கண்டா என்றால் வெங்காயம் என்று அர்த்தம்.
இந்த வெங்காயம் டெல்லி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், ஒரு கிலோ ரூ.35 என்ற அளவில் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த சேமிப்புக் கிடங்கிலிருந்து வெங்காயம் உட்பட காய்கறிகளை ஏற்றிவருவதற்கு மத்திய அரசு இதுவரை லாரிகளையே பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் முதன்முறையாக தற்போது ரயில் வண்டியை பயன்படுத்தியுள்ளது.
ரயில் மூலம் வெங்காயத்தைக் கொண்டு செல்வது செலவு குறைந்தது. சாலை வழியாக எடுத்துச் சென்றால் ரூ.84 லட்சம் செலவாகும். ஆனால், ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டதால் ரூ.70.20 லட்சமே செலவாகியுள்ளது என்று நுகர்வோர் விவகார செயலர் நிதி காரே தெரிவித்துள்ளார். இதேபோல், உத்தரபிரதேசம், அசாம், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட இருப்பதாக அவர்தெரிவித்தார்.