Published : 01 Jun 2018 09:19 AM
Last Updated : 01 Jun 2018 09:19 AM

சிங்கப்பூர் - நியூயார்க் இடையே நீண்டதூர விமான சேவை: அறிமுகம் செய்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் முதல் நியூயார்க் (நெவர்க் விமான நிலையம்) வரையில் நீண்டதூர விமான சேவையினை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் இந்த சேவை செயல்படத் தொடங்கும். இதற்காக புதிய ஏர்பஸ் விமானம் பயன்படுத்தப்பட இருக்கிறது. 16,700 கிலோ மீட்டர் தூரத்தை 18 மணி நேரம் 45 நிமிடத்தில் இந்த விமானம் கடக்கும். வாரத்துக்கு மூன்று முறை இந்த விமான சேவை இயக்கப்பட இருக்கிறது. இந்த சேவையில் மற்றொரு விமானம் இணைக்கப்படும் போது தினசரி விமான போக்குவரத்து தொடங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தற்போது தோஹா முதல் ஆக்லாந்து (நியூசிலாந்து) வரையில் இயக்கப்பட்டு வரும் விமான சேவையே நீண்ட தூரம் நிற்காமல் பயணிக்கும் விமானமாக (கத்தார் ஏர்வேஸ்) இருக்கிறது.

எங்கும் நிற்காமல் செல்லும் இந்த விமான போக்குவரத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இரு நகரங்களுக்கு இடையே குறைந்த நேரத்தில், அதிக வசதியுடன் பயணம் செய்ய முடியும். புதிய ரக விமானத்தை முதலில் பயன்படுத்துவது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்தான். மேலும் சில விமானங்களை வாங்க இருக்கிறோம். இந்த விமானத்தில் 67 பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்களும், 94 பிரீமியம் எகானமி டிக்கெட்களும் உள்ளன என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோ சூன் பாங் ( Goh Choon Phong) கூறினார்.

சிங்கப்பூர் முதல் நியூயார்க் வரையிலான விமான சேவை கடந்த 2013-ம் ஆண்டு வரை இருந்தது. அப்போதைய விமானத்தில் எகானமி வகுப்பு இல்லை. தவிரவும் அந்த சமயத்தில் எரிபொருள் விலை ஏற்றத்தால் இந்த வழித்தடம் லாபமாக இல்லை என்பதால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்த தடத்தில் விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x