

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்து அதன் விலை கடந்த வாரம் கிலோ ரூ.60 வரை உயர்ந்தது. வெளி சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.90 வரை உயர்ந்தது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.42 ஆக குறைந்தது. சில்லறை சந்தைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.100,அவரைக்காய் ரூ.80, முருங்கைக்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.46, கேரட், சம்பார் வெங்காயம் தலா ரூ.40, பச்சை மிளகாய், நூக்கல் தலா ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.30, வெண்டைக்காய், பாகற்காய் தலா ரூ.20, கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.15, முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.10 என விற்கப்பட்டது.
தக்காளி விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை தக்காளி வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், வரும் நாட்களில் தக்காளி விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்" என்றனர்.