கடன் வழங்க பொதுவான இணையதளம்: பொதுத்துறை வங்கிகள் ஆலோசனை

கடன் வழங்க பொதுவான இணையதளம்: பொதுத்துறை வங்கிகள் ஆலோசனை
Updated on
1 min read

தனிநபர் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றை பொதுவான தளத்தின் மூலம் அளிக்க பொதுத்துறை வங்கிகள் ஆலோசித்து வருகின்றன. பொதுவான தளத் தின் மூலம் அனைத்து வங்கிகளும் போட்டியிட முடியும். கடனை திருப்பி செலுத்தும் தகுதிவாய்ந்த கடனாளிகளுக்கு உடனடி கடன் வசதியையும் இதன் மூலம் அளிக்கமுடியும்.

தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்த யோசனை செயல்படுத்தப்பட்டால் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் அளிப்பதற்கான வசதிகளையும் இதன் மூலம் உருவாக்கலாம் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் அனுமதிகளுக்கு காத்திருக்கத் தேவையில்லை. இது வங்கித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சி. வங்கித் துறை கட்டமைப்பை மேம்படுத்தியதில் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா ஒரு கட்டம் என்றால், இந்த பொதுவான தளம் இதன் அடுத்த கட்ட வளர்ச்சி. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் என்று கூறினர். இந்த முயற்சிகளை பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டால் தனியார் வங்கிகளுக்கு இணையாக தங்களின் கடன் அளவை கொண்டுவர முடியும் என அரசு நம்புகிறது என்றனர்.

பொதுத்துறை நிறுவனங்களின் சராசரி கடன் 2018 மார்ச் நிலவரப்படி 4.7 சதவீதமாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் தனியார் துறை வங்கிகளில் கடன் அளவு 20.9 சதவீதமாக உள்ளது. இந்த பொதுவான தளத்தில் மூலம் தனியார் துறை வங்கிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி இருக்கும்,

இந்த யோசனை தற்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. கடன் பெற விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக தங்கள் கடன் விண்ணப்பத்தினை அளிக்கலாம். ஒரே தளத்தில் அனைத்து வங்கிக் கடன் விவரங்களும் கிடைத்து விடும். இந்த விண்ணப்பங்களுக்கு கடன் அளிக்க விரும்பும் வங்கிகள் தங்களது சலுகைகளையும் அறிவிக்கலாம். விண்ணப்பதாரரின் கடன் தகுதி மற்றும் ஆவணங்களை ஒரே தளத்தில் அனைத்து வங்கிகளும் பயன்படுத்த முடியும்.

பொதுத்துறை வங்கிகளின் சேவைகளை விரைவாக்க நிதிச் சேவை சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கான கடன் விண்ணப்பங்களில் முடிவு செய்வதற்கு வங்கிகளில் 15 நாட்கள் வரையிலும் காலம் எடுத்துக் கொள்கின்றன. இந்த தளம் விரைவாக ஒப்புதலை அளிக்க உதவும் என்றும் கூறினர். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in