

திருப்பூர்: இந்தியாவில் செயற்கை நூலிழை, தொழில்நுட்ப ஆடை மற்றும் விளையாட்டு ஆடைகள் உற்பத்தி விரைவில் மேம்படுத்தப்படும் என்று மத்திய ஜவுளித் துறைச் செயலர் ரச்னா ஷா தெரிவித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று ஏற்றுமதியாளர்களுடன் மத்திய அரசின் ஜவுளித் துறைச் செயலர் ரச்னா ஷா கலந்துரையாடினர். இதில், ஜவுளித் துறை இணைச்செயலர் ராஜீவ் சக்சேனா, ஏஇபிசிதென்பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மத்திய ஜவுளித் துறைச் செயலர் ரச்னா ஷா பேசியதாவது: பின்னலாடைத் தொழிலால் திருப்பூர் சர்வதேச அடையாளம் பெற்றுள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழிலில், ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கியப் பங்குவகிக்கிறது. ஆடை உற்பத்தி,பசுமை ஆற்றல் உள்ளிட்ட பல்வேறுவிஷயங்களை கவனத்தில் கொண்டு இயங்குகிறது.
உலக அளவில் ஆடை பயன்பாட்டாளர் தேவையை அறிந்து, பசுமை உற்பத்தியில் திருப்பூர் ஈடுபட்டுள்ளது. அரசும் இதற்குத் துணையாக இருக்கிறது.நாட்டின்பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வளம் என பல்வேறு விஷயங்கள்ஜவுளித் துறையின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. திருப்பூர்கிளஸ்டரில் இருந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும்.
பெண் தொழிலாளர்கள் 80 சதவீதம் வேலை பெற்றிருப்பதன் மூலம், அவர்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெறுகின்றனர். ஏற்கெனவே இந்தியாவில் பருத்தி, சணல், சில்க், செயற்கை நூலிழை உள்ளிட்டவை அதிகம் உள்ளன. உற்பத்தி சார் மானியத் திட்டம் (பிஎல் 2) மூலமாக, செயற்கை நூலிழை, தொழில்நுட்ப ஆடை மற்றும் விளையாட்டு ஆடைகள் உற்பத்தி மேம்படுத்தப்படும். ஜவுளிதுறை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும். ஏற்றுமதி வளர்ச்சிக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.