

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான சேவை செயல்பட துவங்கியது.
இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30-ம் தேதியுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் வரும் 27-ம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமான சேவை ஹைதராபாத், பெங்களூருவுக்கு மீண்டும் துவங்கப்பட உள்ளது. அடுத்ததாக ஏர்ஷபா நிறுவனம் சார்பில் கொச்சி, தூத்துக்குடி, திருப்பதி, சேலம், கோவை, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளுக்கும் சிறிய ரக விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து இந்நிறுவனம் அடுத்து ஹெலிகாப்டர் சேவையையும் துவங்க உள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தை பட்டானூர் அருகே 45 டிகிரி கோணத்தில் சிறிது மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான நிலத்தை எடுப்பது தொடர்பாக சுற்றுலா துறை அதிகாரிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசியுள்ளனர். தற்போதுள்ள ஓடுதளத்தை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.