

சியோல்: ஆசிய பிராந்தியத்தில் தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 10-ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன், டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உற்பத்தி கூடங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்நிறுவனத்துக்கு உற்பத்தி கூடம் உள்ளது. இந்த நிலையில் தான் ஆசியாவில் சாம்சங் நிறுவன சந்தை வாய்ப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் ஜாப் கட் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக சாம்சங் நிறுவன செய்தித் தொடர்பாளர் சர்வதேச ஊடக நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இது தங்கள் நிறுவன செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள முடிவு. மேலும், ஊழியர்கள் படிநிலையை சீர் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றும், இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என்றும் சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தில் மொத்தமாக 2.67 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். சாம்சங் சந்தை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணியில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகலாம் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சிப் உற்பத்தி நிறுவனமான இன்டெல், கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கள் ஊழியர்களில் 15 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. இதை தொடர்ந்தே சாம்சங்கும் இந்த முடிவை எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.