

புதுடெல்லி: கூகுள் மற்றும் அதானி குழுமம் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவு செய்துள்ளன. இது, நிறுவனங்களின் கூட்டு நிலைத்தன்மை இலக்குகளை முன்னேற்றுவதற்கும், தூய்மையான ஆற்றலை அதிகரிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதானி குழுமம் கூறும்போது, ‘‘இந்த கூட்டாண்மையின் மூலம் குஜராத்தின் காவ்டாவில் உள்ள உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையில் அமைந்துள்ள புதியசூரிய-காற்று கலப்பு (ஹைபிரிட்) திட்டத்தில் இருந்து சுத்தமான எரிசக்தியை கூகுள் நிறுவனத்துக்கு வழங்க உள்ளது. இந்த புதிய திட்டம் 2025-ம்ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என தெரிவித்தது.