Published : 01 Aug 2014 09:00 AM
Last Updated : 01 Aug 2014 09:00 AM

தொழிற்சங்கத்துடன் பேரங்கள்

பஜாஜ் ஆட்டோ கம்பெனி அவெஞ்சர், பல்ஸர், டிஸ்கவர், பிளாட்டினா, நிஞ்சா ஆகிய பல்வகை மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள் தயாரிக்கும் நிறுவனம். மூன்று தொழிற்சாலைகள் - மகாராஷ்டிராவில் வலூஜ், சக்கன் என்னும் இரண்டு இடங்களில், உத்ராஞ்சல் மாநிலத்தில் பந்த் நகர் மூன்று தொழிற்சாலைகளிலும் மொத்தமாக 8036 ஊழியர்கள். இவர்களில் பெரும்பாலானோர் Vishwa Kalyan Kamgar Sanghatana (VKKS) என்னும் தொழிற்சங்கத்தில் (யூனியன்) அங்கத்தினர்கள்.

சக்கன் தொழிற்சாலையில் 925 நிரந்தர ஊழியர்கள், 1000–க்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள். ஏப்ரல் 23, 2013. VKKS தொழிலாளிகள் சார்பாக மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது. அவை:

எல்லா நிரந்தர ஊழியர்களுக்கும் 25 சதவிகித சம்பள உயர்வு உடனடியாகத் தரவேண்டும். ஒரு ரூபாய் விலையில் 500 கம்பெனிப் பங்குகள் தரவேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பன.

கம்பெனி மேலாண் இயக்குநர் ராஜீவ் பஜாஜ் இவற்றை ஏற்க மறுத்தார். அவர் தரப்பில் நியாயம் இருந்தது.

2010–ல் பஜாஜ் ஆட்டோ யூனியனுடன் ஒப்பந்தம் கையொப்பமிட்டிருந்தார்கள். இதன்படி, 2019 வரை, ஒவ்வொரு வருடமும், 12 சதவிகிதச் சம்பள உயர்வுதான் கொடுக்கவேண்டும். இந்தப் பன்னிரெண்டு சதவிகித உயர்வே, அக்கம் பக்கக் கம்பெனிகளோடு ஒப்பிடும்போது தாராளமானது.

நிர்வாகம் ஏற்கெனவே, செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. ஆகவே, ஒப்பந்த ஊழியர்களின் பணிகளை நிரந்தர மாக்குவது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம். ஒரு ரூபாய் விலையில் ஆளுக்கு 500 பங்குகள் கேட்பது அநியாயம் என்று ராஜீவ் நினைத்தார். பங்குகளின் அன்றைய மார்க்கெட் விலை 1788 ருபாய். அதாவது, 925 பேருக்கு ஆளுக்கு 500 பங்குகள் என்று கொடுத்தால், 925 x 500 = 4,62,500 பங்குகள் தரவேண்டும். இதனால், கம்பெனிக்கு 82 கோடியே 63 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும்.

பங்குகளைத் தருவதும், சிக்கலான சமாச்சாரம். அரசாங்க அனுமதி வாங்க வேண்டும், பங்குதாரர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும், அவர்கள் சம்மதம் வாங்கவேண்டும். ரூ. 83 கோடி செலவை எப்படி நியாயப்படுத்த முடியும்?

கோரிக்கைகளை நிராகரிக்க முடிவு

நாட்டின் பொருளாதார நிலையும் மந்தமாக இருந்தது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனை திருப்திகரமாக இல்லை. போட்டிகளால், விலையைக் குறைக்கவேண்டிய கட்டாயம். மந்த நிலை மாறுமா, எப்போது மாறும் என்று தெரியாத கால கட்டம். பொருளாதார நிலையைக் காரணம் காட்டி, யூனியனின் கோரிக்கைகளை நிராகரிக்க ராஜீவ் பஜாஜ் முடிவெடுத்தார். கம்பெனி எச்.ஆர். அதிகாரிகள் யூனியன் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். கம்பெனி சார்பில்

எச்.ஆர். அதிகாரிகள். யூனியன் சார்பில் அவர்கள் தலைவர் திலீப் பவார், மூன்று தொழிலாளிகள். கம்பெனி நிர்வாகிகள் தங்கள் நிலைமையை விளக்கினார்கள். பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. பங்குகள் விஷயத்தில் யூனியனின் கோரிக்கை அநியாயமானது என்று ஊடகங்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்தார்கள். இதனாலோ என்னமோ, பங்குகள் கேட்கும் கோரிக்கையை யூனியன் கைவிட்டது.

திலீப் பவாருக்குப் பெரும்பாலான தொழிலாளிகளின் ஆதரவு இல்லை என்று கம்பெனி கணக்குப் போட்டது. ஆகவே, அவரிடம் கறாராகப் பேசியது. தன் பங்குக்கு அவரும் 25 சதவிகிதச் சம்பள உயர்வில் பிடிவாதமாக இருந்தார். பஜாஜ் நிர்வாகம் பேச்சுவார்த்தைகளை தாண்டி, பல வியூகங்களில் யூனியனைச் சந்தித்தது. ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் ஒப்பந்தத்தை யூனியன் மீறுவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

இதை அனுமதித்தால், பிற கம்பெனிகள் சக்கன் கிராமத்தில் முதலீடு செய்யத் தயங்குவார்கள், புதுத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட மாட்டாது, உள்ளூர் ஆட்களுக்கு வேலை வாய்ப்புகள் கணிசமாகக் குறையும் என்று சேதிகள் பரவின. சக்கன் பகுதியைச் சுற்றியிருந்த கிராமப் பஞ்சாயத்துகள் பஜாஜ் நிர்வாகத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

ஆனாலும், யூனியன் இறங்கி வரவில்லை. 25 சதவிகிதச் சம்பள உயர்வு தராவிட்டால், வேலை நிறுத்தம் செய்வோம் என்று நோட்டீஸ் அனுப்பினார்கள். அடிமட்ட ஆதரவு இல்லாத திலீப் பவாரின் வெத்து மிரட்டல் இது என்று கம்பெனி கணித்தது. தன் பங்குக்கு ராஜீவ் பஜாஜ் எச்சரிக்கை விடுத்தார்–வேலை நிறுத்தம் செய்தால், சக்கன் தொழிற்சாலையை மூடி விடுவேன். எல்லாத் தொழிலாளிகளையும் வீட்டுக்கு அனுப்புவேன். வலூஜ், பந்த் நகர் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் உபரி உற்பத்தித் திறன் இருக்கிறது. சக்கன் தொழிற்சாலையின் உற்பத்தி வலூஜ், பந்த் நகர் ஆகிய இரண்டு இடங்களிலும் தொடரும்.

நிர்வாகத்தின் கணக்கு தப்பானது

பேச்சு வார்த்தைகள் முறிந்தன. ஜூன் 25. யூனியன் வேலை நிறுத்தத்தை அறிவித்தது. திலீப் பவாருக்கு ஆதரவு இல்லை, அதனால் பெரும்பாலானோர் வேலைக்கு வருவார்கள் என்று நிர்வாகம் போட்ட கணக்கு தப்பானது. அவரிடம் இருந்த மரியாதையோ, பயமோ, யாருமே வரவில்லை. உற்பத்தி நின்று விட்டது.

தைரியம் கொடுத்த இருவர்

நாட்கள் ஓடின. ஒரு மாதம் ஆயிற்று. உற்பத்தியே செய்யாவிட்டாலும், நஷ்டம் வந்தாலும், தொழிலாளிகளின் கோரிக்கைகளுக்கு இணங்கப் போவதில்லை என்று ராஜீவ் பஜாஜ் உறுதியாக இருந்தார். அவருக்கு தைரியம் கொடுத்தவர்கள் இரண்டு பேர். அவர்கள் யார் தெரியுமா? விநாயகப் பெருமானும், நரகாசுரனும்!

செப்டம்பர் 9 – ம் நாள் விநாயக சதுர்த்தி. நவம்பர் 3 – ம் நாள் தீபாவளி. இவை இரண்டுமே, மகாராஷ்டிர மாநிலத்தில் மாபெரும் கொண்டாட்டங்கள். மாநிலமே திருவிழாக்கோலம் எடுக்கும், பணம் தண்ணீராக ஓடும். இவற்றுக்குச் செலவழிக்க முடியாவிட்டால், மானப் பிரச்சினையாக மக்கள் கருதுவார்கள்.

ஆகஸ்ட் முதல் வாரம். இரண்டு மாதங்களாகச் சம்பளம் வரவில்லை. கையிருப்பு குறையக் குறைய, தொழிலாளிகளின் உறுதியும் தளரத் தொடங்கியது. தினசரிச் செலவுக்கே தடுமாறும் போது அடுத்த மாத விநாயக சதுர்த்திக்கும், நவம்பரின் தீபாவளிக்கும் என்ன செய்வது? நினைத்தாலே தொழிலாளிகளுக்கு வயிற்றைக் கலக்கியது.

இதற்குத்தான் காத்திருந்தார் ராஜீவ் பஜாஜ். சக்கன் தொழிற்சாலையின் உற்பத்தி விரைவிலேயே வலூஜ், பந்த் நகர் தொழிற்சாலைகளுக்கு இடம் பெயரப் போவதாகச் செய்திகள் கசிந்தன. வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குமாறு தொழிலாளர்கள் யூனியனுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள். விருப்பம் இல்லாவிட்டாலும், இணங்கவேண்டிய கட்டாயம் திலீப் பவாருக்கு.

“விநாயக சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வருவதால், தற்காலிகமாக வேலை நிறுத்தத்திலிருந்து யூனியன் பின் வாங்குகிறோம். தக்க சமயத்தில் எங்கள் போராட்டம் மீண்டும் தொடங்கும்” என்று அறிவித்தார். “எந்த நிபந்தனைகளும் இல்லாமல், தங்கள் கோரிக்கைகளை வாபஸ் வாங்கிக்கொண்டு தொழிலாளிகள் வேலைக்குத் திரும்புகிறார்கள்” என்று நிர்வாகம் அறிவித்தது.

50 நாட்கள் வேலை நிறுத்தத்துக்குப் பின், ஆகஸ்ட் 14 அன்று சக்கன் தொழிற்சாலையில் மீண்டும் எந்திரங்கள் சுழன்றன, புத்தம் புது மோட்டார் சைக்கிள்கள் ரோடுகளில் பாயத் தயாராயின.

வெற்றிக்கான காரணங்கள்

தொழிலாளர்கள் நலன் எப்போதும் முதன்மையானது ஆனால், தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க யூனியன் தேர்ந்தெடுத்த நேரம் தவறானது. கம்பெனியின் விற்பனை சிரமதசையில் இருக்கும்போது அவர்கள் கையை முறுக்கினால், பொதுஜன ஆதரவு எப்படிக் கிடைக்கும்?

1,788 ரூபாய் மதிப்புள்ள கம்பெனிப் பங்குகளை ஒரு ரூபாய்க்குக் கேட்டது அநியாயக் கோரிக்கை என்று சொல்லி சுற்றுப்புற கிராமங்கள், ஊடகங்கள் ஆகியோரின் ஆதரவைத் தனக்குத் தேடிக்கொண்ட நிர்வாகத்தின் சாமர்த்தியம். விநாயக சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வருவதையும், அவற்றின் பாதிப்புகளையும் சரியாகக் கணித்த மேனேஜ்மென்ட் தந்திரம்!

பின்கதை: அண்மையில், சக்கனில் மீண்டும் பழைய கோரிக்கைகள், கோஷங்கள், வேலை நிறுத்தம் செய்வோம் என்னும் யூனியன் அறிவிப்புகள்! இந்த முறை வெற்றி யாருக்கோ?

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x