

புதுடெல்லி: சர்வதேச புத்தாக்க குறியீட்டில் இந்தியா 39-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2015-ம் ஆண்டில் இந்தியா 81-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இவ்வாண்டு 42 இடங்கள் முன்னேறி 39-வது இடம் பிடித்துள்ளது. அதேபோல், கீழ் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 38 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மும்பை, டெல்லி, பெங்களூருமற்றும் சென்னை ஆகிய நகரங்கள், உலகின் டாப் 100 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக உள்ளன.
சர்வதேச புத்தாக்க குறியீட்டில், கடந்த 9 ஆண்டுகளில் 81-வது இடத்திலிருந்து 39-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளதை பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இது முக்கியமான நகர்வு. புதியஉருவாக்கங்களை மேற்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இது இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடியது” என்று பதிவிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் ஆகியவை முதன்மையான இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் சீனா 11-வது இடத்தில் உள்ளது.