உலகளவில் 2030-ம் ஆண்டுக்குள் 3-வது பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: எஸ்&பி குளோபல் நிறுவனம் கணிப்பு

உலகளவில் 2030-ம் ஆண்டுக்குள் 3-வது பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: எஸ்&பி குளோபல் நிறுவனம் கணிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: வரும் 2030-31-ம் ஆண்டுக்குள் உலகளவில் இந்தியா 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என எஸ்&பி குளோபல் இந்தியா லீடர்ஷிப் கவுன்சில் தலைவர் அபி ஷேக் தோமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அடுத்து வரும் ஆண்டுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. குறிப்பாக, வர்த்தகம், விவசாயம், ஏஐ, கட்டமைப்பு சீர்திருத்தங்கள், வளர்ந்துவரும் ஆற்றல் தேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. உலக பொருளாதாரத்தை வடிவமைக்க ஆற்றல்மிக்க பணியாளர்களுடன் இந்தியா வளர்ச்சிக்கு தயாரான நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன் பயனாக 2030-31 வரை ஆண்டுதோறும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். அதன் பயனாக, உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவாகும். அதேசமயம், நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 6.8 சதவீத வளர்ச்சியை அடையும். இதற்கு, உற்பத்தி மற்றும் சேவை பொருளாதார மதிப்பு உயர்வு ஊக்கமளிப்பதாக உள்ளது. வர்த்தக பலன்களை அதிகரிக்க உள்கட்டமைப்பு மற்றும் புவிசார் அரசியல் உத்திகளை இந்தியா உருவாக்க வேண்டும். மேலும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நிலையான ஆற்றல் மாற்றத்துக்கான மாற்றுவழிகளை கண்டறிய வேண்டும். காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்வது உயர்வளர்ச்சிக்கு துணையாக அமையும். பங்குச் சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டாலும் அது போட்டித்தன்மையுடன் இருக்கும்.

எல்லாம் சாதகமாக உள்ள நிலையிலும், உணவுப் பணவீக்கத்தால் ஏற்படும் இடர்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், பணவீக்க உயர்வு என்பது நுகர்வு மந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அது வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அபிஷேக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in