Published : 20 Jun 2018 08:30 am

Updated : 20 Jun 2018 08:30 am

 

Published : 20 Jun 2018 08:30 AM
Last Updated : 20 Jun 2018 08:30 AM

வழக்கு விசாரணை முடியும் வரை விடுப்பில் இருக்க சந்தா கொச்சருக்கு அறிவுரை: ஐசிஐசிஐ இயக்குநர் குழு பிஎஸ்இ-க்கு அறிக்கை

ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சந்தா கொச்சரை விடுமுறையில் இருக்குமாறு வங்கியின் இயக்குநர் குழு கேட்டுக் கொண்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கியதில் கொச்சரின் கணவர் பலனடைந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வழக்கமான ஆண்டு விடுப்பில் உள்ள கொச்சரை, இந்த வழக்கு விசாரணை முடியும் வரை விடுப்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ புரூடென்ஷியலின் தலைமைச் செயல் அதிகாரியான சந்தீப் பக்‌ஷி தற்போது வங்கியின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (சிஓஓ) நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியின் செயல்பாடுகளை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் பக்‌ஷி, தற்போதைக்கு வங்கி இயக்குநர் குழுவிற்கு நேரடியாக பதில் அளிப்பார். விசாரணை முடியும் வரை விடுமுறையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட சந்தா கொச்சரின் பதவி அப்படியே இருக்கும். வங்கியின் பிற செயல் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் சந்தீப் பக்‌ஷியிடம் நேரடியாக பதில் அளிக்க வேண்டும்.

2016-ம் ஆண்டு அர்விந்த் குப்தா என்ற வங்கி வாடிக்கையாளர் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் குழுமம், நியூபவர் ரினீவபிள்ஸ ஆகியவற்றுக்குள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இக்கடித நகல் அப்போதைய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனுக்கும் அனுப்பப்பட்டது.

சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் நடத்தும் நியூபவர் ரினீவபிள்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 64 கோடி தொகையை அளிக்க வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் தூத் உறுதியளித்திருந்தார். இவ்விதம் வழங்கப்பட்ட தொகையானது ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட தொகை என்றும் குறிப்பிட்டார். 2012-ம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

வங்கியின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சிஓஓ) நியமிக்கப்பட்டுள்ள பக்‌ஷி, ஜூன் 19-ம் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர் வார்.

ஐசிஐசிஐ வங்கியில் 1986-ம் ஆண்டு தனது பணியைத் தொடங்கிய இவர், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவி வரை உயர்ந்தார். ஐசிஐசிஐ வங்கியில் நிகழ்ந்த நிதி மோசடி குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என். ஸ்ரீ கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்ணன் நியமனம்

இதனிடையே ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக என்.எஸ். கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் நிறுவனத்தில் செயல் இயக்குநராக உள்ளார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x