Published : 16 Jun 2018 09:01 AM
Last Updated : 16 Jun 2018 09:01 AM

இந்தியாவில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்: நிதி ஆயோக் எச்சரிக்கை

இந்தியா வில் மிகக் கடுமையான நிலத்தடி நீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது இந்தியாவில் சுமார் 60 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இறக்கின்றனர். இந்தியாவில் நீர் பற்றாக்குறை மிக மோசமான வகையில் அதிகரித்து வருகிறது.

2030-ம் ஆண்டில் தண்ணீர் தேவை, தண்ணீர் இருப்பை விட மூன்று மடங்காக அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்கும். ஜிடிபியில் 6 சதவீத இழப்பு உருவாகும் என்று கூறியுள்ளது.

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு என்கிற இந்த ஆய்வறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். அவர் பேசுகையில், 2020-ம் ஆண்டுக்குள் 21 முக்கிய நகரங்களின் நிலத்தடி நீர் தீர்ந்துவிடும். இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டில் 70 % நீர்வளம் அசுத்தமாக உள்ளது. தரமான நீர் வளம் கொண்ட 122 நாடுகளின் பட்டியலில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது. நீர் மேலாண்மையில் அனைத்து மாநிலங்களையும் கொண்ட பட்டியலை நிதி ஆயோக் தயாரித்துள்ளது. குறிப்பாக மாநிலங்களின் நிலத்தடி நீர், நீராதார அமைப்புகள், விவசாய தேவை, குடிநீர், மாநில அரசுகளின் கொள்கைகள் அடிப்படையில் 28 குறியீடுகளை கொண்ட இந்த பட்டியலில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, ஹிமாச்சல், சிக்கிம், அசாம் மாநிலங்களும் இந்த குறியீட்டில் முன்னிலையில் உள்ளன.

உத்தரபிரதேசம், பிகார், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் இதர மாநிலங்களில் நீர் மேலாண்மை மோசமாக உள்ளது. இந்த மாநிலங்களின் விவசாய உற்பத்தியிலும் 20-30 சதவீத பங்களிப்பையே வைத்துள்ளன என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x