Published : 22 Jun 2018 07:50 AM
Last Updated : 22 Jun 2018 07:50 AM

பணியாளர்கள் அதிகரிப்பால் இந்தியாவுக்கு ஊதிய பிரச்சினை சவாலாக இருக்கும்: கார்ன் பெர்ரி நிறுவன ஆய்வில் தகவல்

பணியாளர்கள் அதிகரிப்பு காரணமாக 2030-ம் ஆண்டில் இந்தியாவில் குறைந்த ஊதிய பிரச்சினை உருவாகும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கார்ன் பெர்ரி ஆலோசனை நிறுவனம் உலக அளவில் ஊதியம் தொடர்பாக மேற்கொண்ட இந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஊதியப் போக்குகள் என்கிற அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்தியா தனிப்பெரும் பொருளாதாரமாக வளர்ந்தாலும் பணியாளர்களின் அதிகரிப்பு காரணமாக ஊதிய குறைவு பிரச்சினையை சந்திக்கும். அதே நேரத்தில் சர்வதேச அளவில் திறமையானவர்கள் பற்றாக்குறை போக்கு இருக்கும்.

எங்களது இந்த ஆய்வில், இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் அதிகரித்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சர்வதேச அளவில் உயர் திற பணியாளர்களுக்கான பற்றாக்குறை இருக்கும். இதனால் அதிக திறமை கொண்ட பணியாளர்களுக்கான ஊதியம் அதிகரிக்கும்.

2030-ம் ஆண்டுக்குள் உலக அளவில் பணியாளர்களுக்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி டாலராக இருக்கும். அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட மிகப் பெரிய பொருளாதார நாடுகளும் பணியாளர்களின் ஊதிய அதிகரிப்பினை எதிர்கொள்ள உள்ளன.

இந்தியா உள்ளிட்ட 20 முக்கிய நாடுகளில் திறமையானவர்களின் பற்றாக்குறை 2020, 2025, 2030 என மூன்று காலகட்டங்களாக இருக்கும். உற்பத்தி துறை, தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, ஊடகம், நிதிச் சேவைத் துறைகளில் இந்த தேவை அதிகரிக்கும்.

லாபத்தில் பாதிப்பு

சர்வதேச ஊதிய அளவைவிட அமெரிக்க நிறுவனங்களின் ஊதிய விகிதம் 2030-ம் ஆண்டில் 53,000 கோடி டாலர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியில் 17,600 கோடி டாலராக இருக்கும். ஆசிய பசிபிக் நாடுகளில் ஆண்டு சம்பளத்துக்காக 1 லட்சம் கோடி டாலர் செலவிடப்படும். இதனால் நிறுவனங்களின் லாபத்தில் பாதிப்பு இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் ஆசிய பசிபிக் நாடுகளின் தலைவர் திரிட்டிமன சக்ரபதி கூறுகையில், பணியாளர்களின் திறன் அடிப்படையில் சம்பள விகிதங்கள் இருக்கும் என்பதால் அதிக சம்பளம் கொடுக்கும் நிறுவனங்களே பணியாளர்களின் தேர்வாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார் -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x