‘தமிழகத்தில் 5 மாதங்களில் வணிக வரி ரூ.6,091 கோடி கூடுதலாக வசூல்; ஜிஎஸ்டி வரவும் 17% உயர்வு’

அமைச்சர் மூர்த்தி | கோப்புப் படம்.
அமைச்சர் மூர்த்தி | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் வணிக வரி கூடுதலாக ரூ.6,091 கோடி ஈட்டப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வசூலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்ட அரங்கில், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வணிக வரி ஆய்வுக் குழு பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தமைக்காக கூடுதல் ஆணையர் எஸ். ஞானக்குமார் மற்றும் குழுவினருககு அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

அதன்பின் அமைச்சர் பேசுகையில், ''வணிகவரித் துறையின் நடவடிக்கைகள், கண்காணிப்பு மற்றும் அலுவலர்களின் செயல்பாட்டால், வணிகவரித் துறையின் மொத்த வரி வருவாய் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.55,807 கோடியாக உள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கப்பட்ட ரூ.49,716 கோடியுடன் ஒப்பிடுகையில், இந்த நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.6,091 கோடி கூடுதலாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலை பொறுத்தவரை, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.31,338 கோடியாக இருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கப்பட்ட ரூ.26,767 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் 17 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது'' என்றார். கூட்டத்தில் வணிகவரி ஆணையர் டி.ஜெகந்நாதன், இணை ஆணையர் துர்கா மூர்த்தி, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் மற்றும் வணிகவரித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in