Published : 17 Jun 2018 10:17 AM
Last Updated : 17 Jun 2018 10:17 AM

இந்திய வங்கிகளின் வழக்கு செலவுக்கு ரூ.1.80 கோடி அளிக்க மல்லையாவுக்குஇங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

இந்திய வங்கிகளின் வழக்கு செலவுக்கு 2 லட்சம் பவுண்ட் (ரூ. 1.80 லட்சம் கோடி) அளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நீதிமன்றம் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 13 வங்கிகள் கொண்ட கூட்டமைப்பு, வழங்கிய கடனை திருப்பித் தராமல் இங்கிலாந்துக்கு தப்பி வந்து விட்டதாக விஜய் மல்லையா மீது வழக்கு தொடர்ந்தன. இந்த கடன் தொகையை வசூலிக்கும் விதமாக சர்வதேச அளவில் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. கடந்த மாதம் இந்த மனு மீதான விசாரணையின்போது நீதிபதி ஆண்ட்ரூ ஹென்ஷா, சொத்து முடக்கத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டார்.

இந்திய வங்கிகளில் விஜய் மல்லையா கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொகை ரூ 9 ஆயிரம் கோடியாகும்.

சொத்துகளை முடக்குவது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக வங்கிகளுக்கு நீதிமன்ற செலவுத் தொகையாக 2 லட்சம் பவுண்ட் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பொதுவாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான செலவுத் தொகையை நீதிமன்றமே மதிப்பீடு செய்து அதை அளிக்குமாறு வலியுறுத்தும். இல்லையெனில் செலவுத் தொகை குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்டால் அதை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிடும்.

மல்லையா மனு

இதனிடையே மே 8- ம் தேதி அளித்த நீதிமன்ற உத்தரவில் மல்லையா அப்பீல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தகைய அப்பீல் மனுவும் தனியாக பதிவு செய்யப்பட வேண்டும், அதை இதே நீதிமன்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்திய அரசின் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உண்மையிலேயே பரிசீலனைக்கு ஏற்புடையதா என்பதை நீதிமன்றம் பரிசீலித்த பிறகே ஏற்கும். அத்துடன் மனுவை பரிசீலிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதேனும் உள்ளதா என்பதையும் நீதிமன்றம் ஆராயும்.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் மனு தொடர்பான வழக்கு வெஸ்ட்மின்ட்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை ஜூலை 11-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இப்போது ஜூலை 31 அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து தப்பி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அளவுக்கு மிக முக்கியமான வழக்கு அல்ல என்றும் மல்லையாவின் நீதிபதிகள் வாதிட்டுள்ளனர். அத்துடன் மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலையில் போதிய வசதிகள் கிடையாது. விஜய் மல்லையாவை சிறையில் அடைப்பது மனித உரிமை மீறலாகும் என்றும் வாதிட்டனர். இதையடுத்து இந்திய சிறைகளில் உள்ள வசதிகள் குறித்த விவரத்தை நீதிமன்றம் இந்திய அதிகாரிகளிடம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x