Published : 07 Jun 2018 09:16 AM
Last Updated : 07 Jun 2018 09:16 AM

இந்தியாவில் அமேசானின் 5 ஆண்டுகள்: ஜெஃப் பிஸோஸ் வாடிக்கையாளர்களுக்கு கடிதம்

இந்தியாவில் அமேசான் ஆன்லைன் நிறுவனம் செயல்பாடுகளைத் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய செயல்பாடுகள் கூடுதல் சக்தியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அமேசான் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த கடிதத்தில், இந்தியாவில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி அமேசான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் வாங்கும் மற்றும் விற்கும் பழக்கத்தில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் அமேசான் செயல்பாடுகள் மிகுந்த உற்சாகத்தையும், ஆற்றலையும் அளித்துள்ளன. இந்த செயல்பாடுகளை மேலும் சிறப்பாக தொடர்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொருட்களை விநியோகம் செய்வதில் சிறந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். கிண்டில் மற்றும் அலெக்ஸா போன்ற தயாரிப்புகள் மக்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளன.

அமேசான் நிறுவனத்துக்கு இந்திய சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் கடும் போட்டியை அளித்து வருகிறது. இதனால் இந்திய சந்தையை விரிவுபடுத்தும் விதமாக 500 கோடி டாலர் முதலீட்டினை மேற்கொண்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்காவின் சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் 1,600 கோடி டாலருக்கு கையகப்படுத்திய பின்னர் அமேசான் நிறுவனத்துக்கான போட்டி அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிரைன் ஆல்சவ்ஸ்கி சமீபத்தில் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

இந்தியாவில் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் சந்தையை மேலும் விரிவுபடுத்துவதற்காக நிறுவனம் தொடர்ச்சியாக முதலீட்டினை மெற்கொள்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

2018-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அமேசான் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகள் 62.2 கோடி டாலர் நஷ்டத்தினை சந்தித்துள்ள நிலையிலும் இந்தியாவில் முதலீட்டினை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.

அமேசான் நிறுவனம் இந்திய நிறுவனங்கள் விவகார அமைச்சகத்துக்கு அளித்துள்ள தகவல்கள்படி, இந்திய சந்தையில் 2016-17 நிதியாண்டில் ரூ.4,830 கோடி நஷ்டத்தினை சந்தித்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ரூ.3,679 கோடி நஷ்டத்தினை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக நஷ்டத்தினை சந்தித்தாலும், நிறுவனத்தை பரவலாகக் கொண்டு செல்வது, புதிய விநியோக மையங்கள் உருவக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவது போன்றவற்றுக்காக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் 2017-ம் நிதியாண்டில் அமேசான் விற்பனையாளர்கள் சேவை வருமானம் 43 சதவீதம் அதிகரித்து ரூ.3,256 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ. 2,276 கோடியாக இருந்தது.

நிறுவனம் இந்திய சந்தையின் எதிர்கால வளர்ச்சியை திட்டமிட்டு விற்பனையாளர் சந்தை மற்றும் வாடிக்கையாளர் சந்தையில் புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகம் செய்வதற்காகவும் இந்த முதலீடுகளை மேற்கொள்கிறது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x