Published : 21 May 2018 08:02 AM
Last Updated : 21 May 2018 08:02 AM

நீரவ் மோடி, மெகுல் சோக்ஸியை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடுகிறது சிபிஐ

நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீதான வழக்கில் இன்டர்போல் உதவியை சிபிஐ கோர இருக்கிறது. வங்கி உறுதியளிப்பு கடிதம் மூலமாக 200 கோடி டாலர் அளவுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி நடந்திருக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர்கள் மற்றும் உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர்.

சமீபத்தில் இவர்கள் மீது மத்திய புலனாய்வு துறை வழக்குப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து இவர்களை கைது செய்ய இன்டர்போல் உதவியை சிபிஐ கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய புலனாய்வு துறையில் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்ததைத் தொடர்ந்து இவர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கை இன்டர்போல் மூலம் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் இல்லாததால் இவர்கள் மீது ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ரெட்கார்னர் நோட்டீஸ் மூலம் இன்டர்போல் உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய முடியும்.

நீரவ் மோடி மீது கடந்த வாரம் மத்திய புலனாய்வு துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நீரவ் மோடி அவரது நிறுவனம் மூலமாக மோசடியான உறுதியளிப்பு கடிதங்கள் மூலம் ரூ.6,498 கோடி ரூபாயை ஏமாற்றி இருக்கிறார். மெகுல் சோக்சி ரூ.7080 கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறார். வங்கித்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி இது என சிபிஐ தெரிவித்திருக்கிறது. இதுதவிர மெகுல் சோக்சியின் நிறுவனங்கள் ரூ.5,000 கோடி அளவுக்கு தொகையை வங்கியில் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த கடன் வாராக்கடனாகி இருக்கிறது. இதுவும் சிபிஐ கண்காணிப்பில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x