Published : 06 May 2018 10:50 AM
Last Updated : 06 May 2018 10:50 AM

உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்: ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

அடுத்த பத்தாண்டுகளுக்கு உலகில் மிகவேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 7.9 சதவீதம் என்ற அளவில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியா முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச மேம்பாட்டு மையம் இந்த ஆய்வறிக்கையை தயார் செய்துள்ளது. தங்களது பொருளாதாரத்தை சிக்கல் நிறைந்த துறைகளுக்கும் விரிவாக்கியிருப்பதன் மூலம் இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு மிக வேகமாக வளரும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

வேதிப்பொருட்கள், வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்தியதன் மூலம் ஆண்டுக்கு 7.9 சதவீதம் என்ற அளவில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் தற்போதைய வருவாய் உடன் ஒப்பிடும்பொழுது அதனுடைய உற்பத்தித் திறன் எதிர்பார்ப்பைவிட அதிகமாக உள்ளது. இதனால் மிக வேகமான வளர்ச்சி இருக்கும். சிக்கல் நிறைந்த பொருட்களை உள்ளடக்கிய துறையில் நுழைவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. புதிய துறைகளில் எவ்வாறு பரவலாக நுழைவது என்பதை இந்தியா அறிந்துகொண்டால் அதன் வளர்ச்சி நீண்ட கால அளவில் நிலையாக இருக்கும்.

சீனா, ஆண்டுக்கு 4.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும். அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆண்டுக்கு 3.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும். மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் உகாண்டா இரண்டாவது இடத்தில் உள்ளது. அது ஆண்டுக்கு 7.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடையும்.

கச்சா எண்ணெய்

ஒரு நாட்டின் ஏற்றுமதியில் இடம்பெற்றுள்ள பல்வேறு உற்பத்திப் பொருட்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் கமாடிட்டிகளால் இதுவரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியிலிருந்து வேறுபட்டு மற்ற பொருளாதாரங்களும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. சஹாரா பகுதிகளில் அமைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சி, கமாடிட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மேற்கு ஆப்பிரிக்காவைவிட கிழக்கு ஆப்பிரிக்காவில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அதிகமாக இருக்கும். உகாண்டா, தான்சானியா (4-வது இடம்), கென்யா (10-வது இடம்) போன்றவை அடுத்த பத்தாண்டுகளுக்கு மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹார்வர்டு கென்னடி ஸ்கூலின் பேராசிரியர் ரிக்கார்டோ ஹாஸ்மேன் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் என்றார். பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகள் அடுத்த பத்தாண்டுகளில் மேலும் வளர்ச்சி அடையும் என்று கூறிய அவர் வங்காள தேசம், வெனிசுலா மற்றும் அங்கோலா போன்ற நாடுகள் வளர்ச்சி அடைவதைத் திட்டமிடத் தவறிவிட்டன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x