27-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி தாக்கலை எளிதாக்குவது உட்பட முக்கிய முடிவுகள்

27-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி தாக்கலை எளிதாக்குவது உட்பட முக்கிய முடிவுகள்
Updated on
1 min read

ஜிஎஸ்டி வரி தாக்கல் முறையை மேலும் எளிதாக்குவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. 27-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வெள்ளியன்று நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

வரி தாக்கல் முறையை எளிதாக்குவதற்கு அமைச்சரவை குழு அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. முன்பு மாதத்துக்கு மூன்று தாக்கல்கள் செய்ய வேண்டிய சூழலில் ஒருமுறை மட்டும் வரிதாக்கல் செய்தால் போதுமானது என கவுன்சில் முடிவெடுத்திருக்கிறது. ஆறு மாதத்துக்குள் இது நடைமுறைக்கு வரும் என நிதிச் செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

ஜிஎஸ்டி நெட்வொர்க்

ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குதாரர் அமைப்பினை மாற்றுவதற்கு கவுன்சில் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் மத்திய அரசு 24.5 சதவீத பங்குகளையும், மாநில அரசுகள் கூட்டாக 24.5 சதவீத பங்குகளையும் வைத்திருக்கிறது. மீதமுள்ள 51 சதவீத பங்குகள் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, என்.எஸ்.இ. ஸ்டாரஜிக் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் வசம் இருக்கிறது.

மற்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்கி மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசுகள் கூட்டாக இணைந்து 50 சதவீதமும் இந்த நிறுவனத்தில் பங்குகள் வைத்திருக்கும். இந்த முக்கிய முடிவுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. ஜிஎஸ்டி நெட்வொர்க்கை முழுக்கவும் ஒரு அரசுசார் நெட்வொர்க்காக மாற்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2% சலுகை?

டிஜிட்டல் மற்றும் காசோலையை ஊக்குவிக்கும் விதமாக இந்த வகை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் 2 சதவீத சலுகை வழங்கலாம் என்னும் பரிந்துரை இருந்தது. இந்த பரிந்துரையை ஐந்த நபர் குழுவுக்கு (மாநில அமைச்சர்கள் குழு) ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. அடுத்த கூட்டத்துக்கு முன்பாக இந்த குழு தன்னுடைய பரிந்துரையை வழங்கும்.

அதேபோல சர்க்கரை மீது கூடுதல் வரி விதிப்பது குறித்த பரிசீலனையும் நடந்தது. தற்போது சர்க்கரைக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதன் மீது கூடுதல் செஸ் விதிப்பது மற்றும் எத்தனால் மீதான வரியை குறைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த பரிந்துரையும் மாநில அமைச்சரவை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. மாநில அமைச்சர்கள் 2 வாரங்களில் இது குறீத்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு எடுக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு சமீபத்தில் சிறுநீரக சிகிச்சை நடைபெற்றது. தொற்று ஏற்படக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in