Published : 16 May 2018 08:45 AM
Last Updated : 16 May 2018 08:45 AM

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்

கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான மற்றும் நிச்சயமற்ற சூழல் நிலவியது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் பா.ஜ.க அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. அதனால் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரையும் உயர்ந்தன. ஆனால் மதியத்துக்கு பிறகு பா.ஜ.கவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகள் இல்லாததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. தவிர திங்கள் கிழமை வெளியான பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய குறியீடுகளும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை தரவில்லை.

துறை வாரியாக பார்க்கும்போது ஆட்டோமொபைல், ஹெல்த்கேர் மற்றும் கேபிடல் குட்ஸ் ஆகிய துறைகள் சரிந்து முடிந்தன. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து 35543 புள்ளியில் முடிந்தன. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 35993 புள்ளி வரை சென்செக்ஸ் சென்றது. குறைந்த பட்சம் 35497 வரை சரிந்தது. நிப்டி 4 புள்ளிகள் சரிந்து முடிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல், பவர் கிரிட், இண்டஸ்இந்த் வங்கி, டிசிஎஸ் ஆகியவை உயர்ந்தன. மாறாக டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, கோல் இந்தியா மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.

அதே சமயத்தில் கர்நாடக தேர்தல் பங்குச்சந்தைக்கு அவ்வளவு முக்கியமான தகவல் இல்லை. சர்வதேச அளவில் பல முக்கியமான விஷயங்கள் நடக்க இருக்கின்றன. கச்சா எண்ணெய், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அடுத்த சில நாட்களுக்கு பங்குச்சந்தைக்கு முக்கியமான தகவலாக இருக்கும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x