Published : 31 May 2018 08:44 AM
Last Updated : 31 May 2018 08:44 AM

வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் தொடங்கியது: ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு

இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (ஐபிஏ) அறிவித்த 2 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுத்துள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 2-நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளனர். இதனால் பொதுத்துறை வங்கி சேவைகள் தேசிய அளவில் தடைபட்டுள்ளன. இருப்பினும் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி போன்றவை வழக்கம்போல இயங்கி வருகின்றன. காசோலை தொடர்பான பரிமாற்றங்களில் மட்டும் சில சிக்கல்கள் இந்த வங்கிகளில் காணப்படுகின்றன.

மே மாத இறுதியில் இந்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், வங்கிகளில் இருந்து மாத சம்பளத்தை எடுக்கும் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம். சில ஏடிஎம் சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை தொடர்பான செயல்பாடுகள், நிரந்தர கணக்கை புதுப்பித்தல், அரசாங்க கருவூல செயல்பாடுகள் போன்றவற்றில் இந்த வேலை நிறுத்தம் தாக்கம் ஏற்படுத்தும்.

வங்கிகளுக்கும் அதன் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் 9 வங்கிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பான யுஎஃப்பியூ இந்த போராட்டத்தை அறிவித்துள்ளதாகவும், கடந்த முறை 15 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதால் இந்தப் போராட்டம் வெடித்துள்ளதாகவும் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் (ஏஐபிஈஏ) தலைவர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மக்களாட்சியில் வழங்கப்பட்டுள்ள உரிமையின்படி தேசிய அளவிலான போராட்டத்தில் கலந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வெறும் 2 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே வேலை நிறுத்தத்தைத் தவிர தங்களுக்கு வேறு வழிகள் எதுவும் இல்லையென்றும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அனைந்திந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தின் (ஏஐபிஓசி) இணை பொதுச் செயலாளர் ரவீந்தர் குப்தா கூறினார். அரசாங்கத் திட்டங்களான முத்ரா, ஜன் தன் யோஜனா, பணமதிப்பு நீக்கம் போன்றவை பொதுத்துறை வங்கி ஊழியர்களால் வெற்றியடைந்ததாகவும், ஆனால் அதற்கான ஊதிய உயர்வு 2 சதவீதம் என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைத்த வங்கி ஊழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் குப்தா குறிப்பிட்டார்.

இந்தியாவில் 21 பொதுத்துறை வங்கிகளின் 85,000 கிளைகள் உள்ளன. நாட்டின் 70 சதவீத வங்கி செயல்பாடுகள் பொதுத்துறை வங்கி கிளைகளில் நடைபெறுகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி. பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் காரணமாக தங்களது சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என முன்னதாகவே வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளன.

ஒரு மணி நேரத்துக்கு ரூ.9 கோடி நஷ்டம்

வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தினாலும் கடந்த நிதி ஆண்டில் (2017-18) வங்கிகள் சந்தித்துள்ள நஷ்டம் ரூ.79 ஆயிரம் கோடி. வங்கிகளின் வாராக் கடன் ரூ.8.6 லட்சம் கோடி. வங்கி வரலாற்றில் இது மிக அதிகமான தொகையாகும்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டின் அளவு ரூ.24.4 லட்சம் கோடி. இலவச எல்பிஜி இணைப்புக்காக செலவிடப்படும் தொகை ரூ.13 ஆயிரம் கோடி. விவசாயத்துக்கான ஒதுக்கீடு ரூ.58 ஆயிரம் கோடி. அனைத்து மத்திய அரசு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை சேர்த்தாலே ரூ.7.1 லட்சம் கோடிதான் வரும். ஆனால் பொதுத்துறை வங்கிகளால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இதைவிட அதிகம்.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் மத்திய அரசு வங்கிகளில் மேற்கொண்ட மறு மூலதனம் ரூ.90 ஆயிரம் கோடியாகும்.

பொதுத்துறை வங்கிகள் எதிர்கொண்ட நஷ்டம் ரூ.79,071 கோடி. அதேசமயம் தனியார் வங்கிகள் ஈட்டிய லாபம் ரூ.42 ஆயிரம் கோடியாகும்.

பொதுத்துறை வங்கிகள் நிமிஷத்துக்கு ரூ.15 லட்சத்தை நஷ்டமாக சந்தித்தன.

இரண்டு நாள் போராட்டம் நடத்துவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள்தான். தனியார் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x