Published : 01 May 2018 09:55 AM
Last Updated : 01 May 2018 09:55 AM

ஆன்லைன் ராஜா 25: புரியாத புதிர்!

கை

சாங்ஷின் (Cai Chongxin) தைவானில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் அப்பா செல்வத்துள் செல்வம் கல்விச் செல்வம் என்று நம்புபவர். ஆகவே, மகனைப் பதின்மூன்றாம் வயது பிஞ்சுப் பருவத்திலேயே அமெரிக்காவுக்கு அனுப்பினார். ஆங்கிலம் பேசத் தெரியாது, குடும்பத்தைப் பிரிந்து வாழும் தனிமை. இவற்றுக்கு வடிகாலாக இருந்தது, லக்ரோஸ் (Lacrosse) என்னும் விளையாட்டு. நம் ஊர் ஹாக்கி போன்றது. சாங்ஷினுக்கு லக்ரோஸ் மிகவும் பிடித்தது. அதிக நேரம் மைதானத்தில் செலவிட்டார். ``ஒரு அணியின் அங்கமாகப் பிறரோடு ஒத்துழைத்தல், விடாமுயற்சி, தலைமைப் பண்புகள் ஆகியவற்றை லக்ரோஸ் எனக்குக் கற்றுக் கொடுத்தது.”

அப்பாவின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்புணர்ச்சியோடு படிப்பிலும் ஜொலித்தார். ஆங்கிலத்தில் தடுமாறிய சிறுவன் ஐந்தே ஆண்டுகளில் தன்னம்பிக்கை கொண்ட இளைஞர். ஆளுமையில் மட்டுமல்ல, பெயரிலும் மாற்றம். கை சாங்ஷின் என்னும் சீனப்பெயர் வாயில் நுழையாத சக மாணவர்கள், பேராசிரியர்கள் வைத்த புதுப் பெயர், ஜோ ஸாய் (Joe Tsai). சுருக்கமாக / செல்லமாக ஜோ.

படிப்பு, விளையாட்டு ஆகிய பன்முகத் திறமைகளால், உலகப் புகழ்பெற்ற யேல் பல்கலைக் கழகத்தின் (Yale University)* கதவுகள் திறந்தன. பொருளாதாரம், கிழக்கு ஆசியா ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அடுத்து, உலகின் நம் பர் 1 யேல் சட்டக் கல்லூரியில் முதுகலைப் பட்டம்.

*( 1968 –ம் ஆண்டு, அறிஞர் அண்ணாவுக்கு அழைப்பு விடுத்து, தங்களுடைய சப் ஃபெல்லோஷிப் (Chubb Fellowship) என்னும் தலை சிறந்த விருது தந்து கெளரவித்தது யேல் பலகலைக் கழகம்தான். இந்த விருது பெற்ற முதல் அமெரிக்கர் அல்லாதவர் அண்ணா!)

சுமார் இரண்டு வருடங்கள் ஜோ ஒரு அமெரிக்கச் சட்ட ஆலோசனை நிறுவனத்தில் வேலை பார்த்தார். சீனா தன் இரும்புக் கதவுகளைத் திறந்துகொண்டிருந்த காலம். தனக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைப்பதோடு, பிறந்த மண்ணின் வளர்ச்சிக்கும் உதவலாம் என்னும் ஆசை. ஆசியாவின் நிதி, முதலீட்டுத் தலைநகரமாகிக் கொண்டிருந்த ஹாங்காங் தன் எதிர்காலத்துக்கு பலமான அடித்தளம் என்று நினைத்தார். அங்கே வேலை வாய்ப்புகளைத் தேடினார்.

ஸ்வீடன் நாட்டின் இன்வெஸ்டர் ஏபி (Investor AB) நிறுவனம் ஹாங்காங் நகரில் கிளை திறந்தார்கள். இதை நிர்வகிக்கச் சட்டமும், பொருளாதாரமும் தெரிந்த துடிப்பான இளைஞர் தேவை. ஜாடிக்கேற்ற மூடி. ஜோ பொறுப்பேற்றார்.

தன் நிறுவனம் முதலீடு செய்வதற்கான சீன கம்பெனிகளை தேடிக்கொண்டிருந்தார். ஃபோர்ப்ஸ் (Forbes), நியூஸ்வீக் (Newsweek) ஆகிய பத்திரிகைகளில் அலிபாபா பற்றி வெளியாகியிருந்த செய்திகளைப் படித்தார்.

இப்போது ஒரு நிகழ்வுப் பொருத்தம். ஜெர்ரி வின் (Jerry Win) தைவான் பிசினஸ்மேன். ஜோவின் நெருங்கிய நண்பர். தன் தொழில் நிமித்தமாக ஹாங்ஸெள நகரம் போயிருந்தார். அலிபாபா கம்பெனி பற்றிக் கேள்விப்பட்டார். ஜோவுக்கு போன் செய்தார்,

“ஹாங்ஸெள நகரத்தில் இருக்கும் பிசின்ஸ்மேன் ஜாக் மாவை நீ கட்டாயம் சந்திக்கவேண்டும். அவரைத் தீர்க்கதரிசி என்று சிலர் சொல்கிறார்கள்; இன்னும் பலர் கற்பனையாளரான பைத்தியம் என்று அழைக்கிறார்கள்.”

துணிகர முதலீட்டாளர்கள் தேடுவது இதைப்போன்ற விசித்திரமான, வித்தியாசமான தொழில் முனைவர்களைத்தாம். ஆகவே, ஜோ உடனேயே ஜாக் மாவுக்கு போன் செய்தார். எங்கிருந்து பணம் வரும் என்று ஏங்கிக்கொண்டிருந்த அவரும், இன்வெஸ்டர் ஏபி கம்பெனியின் மேனேஜர் என்றவுடன், மறு நாளே வரச் சொன்னார்.

இன்னொரு தற்செயல். விமானத்தில் அவர் இருக்கைக்கு எதிரே, பிரபல எக்கானமிஸ்ட் (Economist) பத்திரிகை. படிக்கத் தொடங்கினார். கிரிஸ் ஆன்டர்சன் என்னும் புகழ்பெற்ற நிருபரின் ஆசிய ஆன்லைன் பிசினஸ் பற்றிய கட்டுரை. அதில் இருந்த ஒரு வாக்கியம், “அமெரிக்காவுக்கு (அமேசானின்) ஜெஃப் பீசோஸ். சீனாவுக்கு ஜாக் மா.”

ஜோவுக்கு ஆன்டர்சன் நல்ல நண்பர். ஹாங்ஸெள வந்ததும், அவருக்கு போன் செய்தார். ``ஜெஃப் பீசோஸ் ஆன்லைன் உலகச் சக்கரவர்த்தி. ஜாக் மா புதுமுகம். இருவரையும் ஒப்பிடலாமா?” என்று கேட் டார்.

ஆன்டர்சன் விளக்கினார். “1999 ஜனவரியில் ஜாக் மாவைச் சந்தித்தேன். தன் பிசினஸ் ஐடியா பற்றிச் சொன்னார். சீனத் தயாரிப்பாளர்களை உலகச் சந்தைக்கு அழைத்துவரும் அற்புதமான திட்டமாகத் தோன்றியது. ஜெஃப் போல் ஜாக் மாவும் இன்டர்நெட்டின் வீச்சு அறிந்து அதைப் பயன்படுத்தும் தொழில் முனைவர். ஆகவேதான் இருவரையும் ஒப்பிட்டேன்.”

ஆன்டர்சன் நேர்மையான எழுத்தாளர். ஆகவே, அலிபாபா பற்றிய ஜோவின் எதிர்பார்ப்புகள் எகிறின.

ஜோவும், ஜாக் மாவும் ஒரு ஹோட்டலில் சந்தித்தார்கள். ஜாக் மா உணர்ச்சிப் பெருக்கோடு தன் கனவுகளை விவரித்தார். B2B பிசினஸ் செய்கிறோம். பத்தே ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய ஆன்லைன் கம்பெனியாவோம், உலகின் டாப் 10 இணையதளங்களில் இடம் பிடிப்போம் என்று உறுதியோடு முழங்கினார். இது வெறும் பகல் கனவல்ல, Mission (குறிக்கோள்), Vision (தொலைநோக்கு), Values (கோட்பாடுகள்) ஆகிய பாதைகளில் நிறைவேற்றப்போகும் நிஜம் என்று விளக்கினார்.

பேச்சுக்கு நடுவில் ஜாக் மா உரக்கச் சிரித்தார். அவரே கை தட்டிக்கொண்டார். ஜோவுக்குச் சுவையான நாடகம் பார்க்கும் உணர்வு. ஒரு சில அமெரிக்க கம்பெனிகள் மட்டுமே பின்பற்றிக்கொண்டிருந்த நவீன மேனேஜ்மென்ட் முறைகளைப் பின்பற்றும் சீனச் சகோதரரின் தொழில் முனைப்பைப் பார்த்துப் பெருமை, பிரமிப்பு.

ஜோ, ஜாக் மாவிடம் கேட்டார், ``நான் அலிபாபாவின் தலைமை அலுவலகத்தைப் பார்க்கலாமா?”

ஜாக் மா தனக்குள் சிரித்துக்கொண்டார். “அலிபாபாவுக்கு ஊர் முழுக்க ஆபீஸ்கள் இருப்பதாக இவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். இருப்பதோ ஒரே அலுவலகம். அதுவும், துக்குனூண்டுக் குடியிருப்பு. அதைப் பார்த்துவிட்டு ஜோ மயக்கம் போட்டு விழாமல் இருந்தால் சரி.”

இருவரும் புறப்பட்டார்கள். வந்து சேர்ந்தார்கள். ஜோவுக்கு அதிர்ச்சிகள் ஆரம்பம்.

``தொழில்நுட்ப கம்பெனி. ஆகவே, நவீனமான பளிச் தனிக் கட்டடம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். அலிபாபா ஆபீசைப் பார்த்ததும், தைவானில் இருக்கும் என் பாட்டியின் பழங்கால அடுக்குமாடிக் குடியிருப்புதான் நினைவுக்கு வந்தது.

அலுவலகத்துக்கு வெளியே பத்துக்கும் அதிகமான காலணி ஜோடிகள். இத்தனை பேரா இந்தச் சின்ன இடத்தில்?”

ஜாக் மா அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறந்தது. மே மாதச் சுட்டெரிக்கும் வெயில். அலுவலகத்தில் ஏசி இல்லை. சில மின்விசிறிகள் மட்டுமே சுழன்றன. இரவு பகலாக விழிப்பதால், கண்களைச் சுற்றிக் கருவளையங்களோடு கம்ப்யூட்டர்கள் முன்னால் பலர். தரையில் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கும் சிலர். காலி நூடுல்ஸ் கப்கள். இந்தக் கந்தர கோளங்களுக்கு மத்தியிலிருந்து இருவர் எழுந்து தங்கள் நாற்காலிகளைக் காலி செய்தார்கள். ஜாக் மாவும், ஜோவும் உட்கார இடம் தந்தார்கள்.

முதலீடு செய்பவர் வந்திருக்கிறாரே, அவர் அலுவலகத்தின் ``அலங்கோலத்தைப்” பார்த்து என்ன நினைப்பாரோ, பணம் போடத் தயங்குவாரோ என்னும் பயமோ, இதனால் வரும் தாழ்வு மனப்பான்மையோ ஜாக் மாவிடம் கொஞ்சம்கூட இல்லை. அவர் நினைத்திருந்தால், அலுவலகத்துக்கு ஒப்பனை செய்து நாடகமாடியிருக்கலாம். அதைச் செய்யாமல், உள்ளதை உள்ளபடியே காட்டிய நேர்மை ஜோவைக் கவர்ந்தது.

ஜோவுக்கு வியர்த்துக் கொட்டியது. கோட்டைக் கழற்றினார். டையைத் தளர்த்திக்கொண்டார்.

``ஜாக் மா, நான் இவர்களோடு பேசலாமா?”

``தாராளமாக.”

பேசி முடித்தவுடன், ஜோவுக்குத் தன் நண்பர் ஜெர்ரி வின் “ஜாக் மா ஒரு கற்பனையாளரான பைத்தியம்.” என்று தன்னிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அவரிடம் போய்ச் சொல்லவேண்டும், ``ஜெர்ரி வின், உங்கள் நினைப்பு தவறு. ஜாக் மா மட்டுமல்ல, அலிபாபா சொந்தக்காரர்கள் பதினெட்டுப் பேரும் கற்பனையாளரான பைத்தியங்கள்.”

ஜோ கண்கள் முன்னால் ஐந்து விஷயங்கள் நர்த்தனமாடின;

1. ஜாக் மாவின் நேர்மை.

2. இன்டர்நெட் தொழில்நுட்பத்திலும், மேனேஜ்மென்டிலும் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த அப்டுடேட் அறிவு.

3. எட்டவேண்டிய இலக்கு, அதற்கான பாதை ஆகியவற்றில் தெளிவு.

4. ஜெயிக்கும் வெறி.

5. அர்ப்பணிப்புக்கொண்ட சகாக்கள்.

சந்தேகமேயில்லை. அலிபாபா நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானல்ல, வேர்விட்டு விழுதுவிட்டு நீடிக்கப்போகும் ஆலமரக் கன்று.

அலுவலகத்தை விட்டுவர ஜோவுக்கு மனமேயில்லை. விடை பெற்றுக்கொண்டார்.

“மறுபடி சந்திப்போம். (See you again)”

முதலீடு செய்ய வந்தவர், கம்பெனியின் லாப, நஷ்டம், சொத்து, கடன், பணத்தேவை ஆகிய வழக்கமான கேள்விகள் எதுவுமே கேட்கவில்லை. முதலீடு பற்றியே வாய் திறக்கவில்லை. ஆனால், ஜாக் மா வாசற்கதவைத் தட்டித் தானாகவே வந்த வாய்ப்பை நழுவவிடும் ஆளில்லை. கேட்டார், ``ஜோ சார், முதலீடு பற்றி எப்போது உங்கள் முடிவைச் சொல்லுவீர்கள்?”

ஜோ பதில், ``ஹாங்காங் போனவுடன் என் ரிப்போர்ட்டை ஸ்வீடனில் இருக்கும் தலைமை அலுவலகத்துக்கு அனுப்புவேன். அங்கிருந்து பதில் வரட்டும்.” மழுப்பல் பதில். ஜாக் மா மனதில் குறளி சொன்னது, இவரிடம் பணம் பெயராது இந்தக் கணிப்பு முழுக்க முழுக்கக் கரெக்ட். அலிபாபாவில் தன் நிறுவனம் முதலீடு செய்யப்போவதில்லை என்று ஜோ உறுதியான முடிவெடுத்துவிட்டார். அவர் பிளானே வேறு. அது என்ன பிளான்?

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x