Published : 14 May 2018 07:59 AM
Last Updated : 14 May 2018 07:59 AM

பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்ற விவகாரம்: ஒப்பந்த தகவல்களை பெறுகிறது வருமான வரித்துறை; விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என ஆய்வு செய்ய முடிவு

1,600 கோடி டாலருக்கு பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியிருக்கும் நிலையில், இந்த விற்பனை ஒப்பந்தம் பற்றிய தகவல்களைப் பெற வருமான வரித்துறை முடிவுசெய்துள்ளது. நிறுவனங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும், ஜிஏஏஆர் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக இந்த ஒப்பந்தம் வருமான வரித்துறையால் கேட்கப்பட உள்ளது.

வருமான வரிச் சட்டப் பிரிவு 9(1)-ன் படி சிங்கப்பூர் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா செய்துள்ள இரு தரப்பு வரி ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் வரிச் சலுகைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை வால்மார்ட்டுக்கு விற்றதில் செல்லுபடியாகுமா என வருமான வரித்துறை ஆய்வு செய்ய இருக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனமும், வால்மார்ட்டும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி சிங்கப்பூரைச் சேர்ந்த பிளிப்கார்ட் பிரைவேட் லிமிடெடின் 77 சதவீத பங்குகளை 1,600 கோடி டாலருக்கு வால்மார்ட் நிறுவனம் கைப்பற்ற இருக்கிறது.

இந்த விற்பனை தொடர்பாக நிறுவனங்கள் செலுத்தவேண்டிய வரி எவ்வளவு என்பதை ஆய்வு செய்ய வால்மார்ட்டுடன் செய்துகொண்ட பங்கு விற்பனை ஒப்பந்தத் தகவல்களைத் தருமாறு பிளிப்கார்ட் நிறுவனத்திடம் இந்திய வருமான வரித்துறை கேட்க இருக்கிறது. விற்பனை நடைமுறைகள் முழுவதுமாக முடிந்தபின்பு இந்தத் தகவல்களைக் கேட்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

முதலீடு செய்யப்பட்டதற்கான காரணம், கிடைத்த லாபம், ஜிஏஏஆர் வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா போன்றவை ஆய்வு செய்யப்பட இருக்கிறது. இரட்டை வரி விதிப்பு (டிடிஏஏ) தொடர்பாக இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் மூலம் வரிச் சலுகை கிடைக்கும் வாய்ப்புள்ளதா என்றும் வருமான வரித்துறை ஆய்வு செய்ய உள்ளது.

பிளிப்கார்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை சாப்ட்பேங்க் தங்கள் கைவசம் வைத்திருந்ததற்கான மூலதன ஆதாய வரி விதிப்பு தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 195(2)-ன் படி வால்மார்ட் நிறுவனம் செலுத்தவேண்டிய வரி பற்றிய ஆலோசனைகளைக் கேட்டுப் பெறலாம் என வருமான வரித்துறை கடந்த வாரம் வால்மார்ட்டுக்கு கடிதம் எழுதியிருந்தது.

வருமான வரிச் சட்டப் பிரிவு 195-ன் படி இந்தியாவில் நிரந்தர குடியுரிமை இல்லாத ஒருவருக்கு தனிப்பட்ட நபரோ, நிறுவனமோ பணம் அளித்தால் நிரந்தர குடியுரிமை இல்லாதவரிடமிருந்து வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் சொத்துகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான சொத்துகள் இந்தியாவில் இருந்தால் அந்த நிறுவனம் வருமான வரி சட்டப் பிரிவு 9(1)-ன் படி வரி செலுத்த வேண்டும். பிளிப்கார்ட் சிங்கப்பூர் நிறுவனத்தின் பெரும்பான்மையான சொத்துகள் இந்தியாவில் இருப்பதால் அந்த நிறுவனம் மூலதன ஆதாய வரி செலுத்தவேண்டும். பிளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால், 20 சதவீதம் அளவுக்கு வரி செலுத்த நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x