Published : 01 May 2018 09:52 AM
Last Updated : 01 May 2018 09:52 AM

ஜிஎஸ்டி வரி தாக்கல் நடைமுறையில் மாற்றம்: மே-4 அன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதில் உள்ள சிக்கல்களைக் குறைக்கும் பொருட்டு சரக்கு மற்றும் சேவை வரியை மனித தலையீடின்றி ஜிஎஸ்டி நெட்வொர்க் தொழில்நுட்பமே கணக்கிடும் நடைமுறையைக் கொண்டுவர மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் வரி செலுத்துபவர்கள் தனியாக ஜிஎஸ்டி படிவங்களை தாக்கல் செய்யவேண்டிய அவசியம் இருக்காது.

பொருளை வாங்குபவருக்கு ஜிஎஸ்டி கட்டணம் அடங்கிய ரசீதை விற்பவர் அளித்ததும், விற்பவர் அந்த ரசீதை மேற்கொண்டு மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாத வகையில் ஜிஎஸ்டி நடைமுறைகள் மாற்றப்பட உள்ளன.

பொருளை வாங்கியது மற்றும் விற்றது உள்ளிட்ட விபரங்களை ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்யவேண்டிய ஜிஎஸ்டி வரியை ஜிஎஸ்டி நெட்வொர்க் அதுவாகவே உருவாக்கும். வரும் மே-4 அன்று நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்த முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. பொருட்களை விற்பவர்கள் ரசீதுகளை தொடர்ச்சியாக பதிவு செய்யும் வகையிலும், வாங்குபவர்கள் அதனைப் பார்க்கும் வகையிலுமான வசதிகள் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த ரசீதுகளை விற்பவர்கள் மேற்கொண்டு மாற்றவோ அல்லது அழிக்கவோ இயலாத வகையில், வாங்குபவர்கள் இந்த ரசீதை பாதுகாக்க இயலும். இதன்மூலம் விற்பவர் இந்தத் தொகையை செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்த முறையின் மூலம் வரி செலுத்துவதில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைக் கண்டறிய முடியும். குறிப்பிட்ட கால அளவில் வரியை முறையாக செலுத்தாத விற்பனையாளர்கள் குறித்த பட்டியலை ஜிஎஸ்டி நெட்வொர்க் உருவாக்கும்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பின்னும் விற்பனையாளர்கள் வரி செலுத்தவில்லையென்றால், பொருளை வாங்கியவர்களுக்கு அவர்கள் செலுத்திய உள்ளீட்டு வரியை திருப்பி அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தொடர்ந்து வரி செலுத்துவதில் முறைகேடுகளை செய்துவரும் விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி நெட்வொர்க்கால் கண்டறியப்பட்டு பொருட்களை விற்பதற்கு முன்பே குறிப்பிட்ட தொகையை வரியாக கட்டும் வகையில் நடைமுறைகள் மாற்றப்பட உள்ளன. ஜிஎஸ்டி நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் வழி இந்த செயல்பாடுகள் நடப்பதால் ஜிஎஸ்டி வரியை கணக்கிட்டு தாக்கல் செய்வதில் உள்ள சிக்கல்கள் குறைய இருக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த வரி நிபுணர்கள், ஜிஎஸ்டி கட்டண ரசீதை பொருளை வாங்குபவர் ஏற்றுக்கொண்டபின்புதான் வரி செலுத்தப்படும் என்பது தினந்தோறும் பல பொருட்களை வாங்கும் நிறுவனங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம், தினந்தோறும் ரசீதுகளை ஏற்றுக்கொள்வதெற்கெனவே ஒருவரை நியமிப்பது சிறிய நிறுவனங்களுக்கே கூட கடினமான காரியம் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x