Published : 03 May 2018 08:30 AM
Last Updated : 03 May 2018 08:30 AM

ஹெச்சிஎல் நிகர லாபம் 9.8 சதவீதம் சரிவு: சந்தை மதிப்பு ரூ.7,009 கோடி இழப்பு

இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 9.8 சதவீதம் சரிந்து ரூ.2,230 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.2,474 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 1.3 சதவீதம் உயர்ந்து ரூ.8,722 கோடியாக இருக்கிறது.

மார்ச் காலாண்டு மொத்த வருமானம் 2.2 சதவீத அளவுக்கு மட்டுமே உயர்ந்து ரூ.13,480 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.13,183 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 6.4 சதவீதம் உயர்ந்து ரூ.51,786 கோடியாக இருக்கிறது.

அடுத்த கட்ட தொழில்நுட்பங்களுக்காக கடந்த சில ஆண்டுகளாக 10 கோடி டாலர் வரை முதலீடு செய்திருக்கிறோம்.மொத்த வருமானத்தில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் 23.4 சதவீத வருமானம் கிடைக்கிறது என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சி.விஜய்குமார் தெரிவித்தார். தவிர நிறுவனத்தை வலுப்படுத்த புதிய நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இருக்கிறோம். ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராய்கிறோம் என்றும் விஜய்குமார் கூறினார்.

மார்ச் மாத முடிவில் 1.2 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். நிறுவனத்தில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 15.5 சதவீதமாக இருக்கிறது. பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஜூலை காலாண்டில் வழங்கப்படும். ஒரு பங்குக்கு ரூ.2 டிவிடெண்டாக வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

ரூ.7,009 கோடி இழப்பு

நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்திருப்பதால் நேற்றைய வர்த்தகத்தில் ஹெச்சிஎல் பங்கு 4.96 சதவீதம் சரிந்து 1,000.50 ரூபாயில் முடிந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.7,009 கோடி சரிந்து ரூ.1.39 லட்சம் கோடியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x