Published : 25 May 2018 08:27 AM
Last Updated : 25 May 2018 08:27 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நீரவ் மோடி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு எதிராக முதல் குற்றப் பத்திரிகையை புலனாய்வுத் துறை நேற்று தாக்கல் செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் ரூ.13,000 கோடி நிதி மோசடி நடைபெற்றது இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மோசடி யில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் உட்பட வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 1200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. தொழிலதிபர் நீரவ் மோடி மீது குற்றவியல் வழக்குகள் இருந்து வரும் நிலையில், தற்போது நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வங்கி அதிகாரிகளின் உதவியுடன் போலி உத்தரவாத கடிதங்கள் மூலம் நீரவ் மோடி மற்றும் அவரது குழுமம் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்று சிபிஐ கூறியுள்ளது. தவிர நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸி மீது இரண்டாவதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சொத்துகள் பறிமுதல்

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நீரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துகளையும் சிபிஐ பறிமு தல் செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரூ.85 கோடி மதிப்புள்ள 34,000 ஆபரண நகைகளை மெகுல் சோக்ஸிக்கு சொந்தமான இடங்களில் இருந்து கடந்த வாரத்தில் பறிமுதல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக மார்ச் மாதம் வரை இந்த வழக்கில் தொடர்புடைய ரூ.7,600 கோடி சொத்துகளை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

இதர புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து மத்திய புலனாய்வு துறை இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக கடந்த மாதத்தில் இரண்டு குற்றப் பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x