

Fகோவை: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், ஒரு சவரன் ரூ.4,500 வரை விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் கடந்த 10 ஆண்டு கால கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கோவை நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழில் நகரமான கோவை மாவட்டம் தங்க நகை உற்பத்தி தொழிலில் இந்திய அளவில் 3-ம் இடத்தில் உள்ளது. தவிர, உலகளவிலும் புகழ்பெற்று விளங்குகிறது. கரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மக்களை மட்டுமல்லாது நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. தங்கத்துக்கு 3 சதவீத ஜிஎஸ்டி வரி மற்றும் 15 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இறக்குமதி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என தொழில் துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் நம்மிடம் கூறும்போது, “கோவை நகரில் மட்டும் ஆண்டுக்கு 100 டன் வரை தங்க நகை உற்பத்தி செய்யப்படுகிறது. தங்க நகை தொழிலில் கோவையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேர் வரைக்கும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தினமும் 100 கிலோ அளவிலான வணிகம் நடைபெறுவது வழக்கம்.
இறக்குமதி வரி உயர்வு மற்றும் தங்கத்தின் விலை உயர்வால் கோவையில் நகைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால், சவரனுக்கு ரூ.4,000 முதல் ரூ.4,500 வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் நாட்களிலும் இது தொடரும். இருந்தபோதும் இறக்குமதி வரி 9 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது மக்களுக்கு மட்டுமின்றி இத்தொழிலில் உள்ள அனைவருக்கும் மிகுந்த பயன்தரும். நவீன டிசைன்கள் கொண்ட நகைகள், பழங்கால டிசைன் (ஆன்டிக்) என அனைத்து வகை தங்க நகைகள் தயாரிப்பில் கோவை சிறந்து விளங்குவதால் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அமைந்தால் தங்க நகை தொழிலில் கோவை மிக சிறப்பான வளர்ச்சி பெறும்” என்றார்.
இதுவரை ரூ.3,160 வரை குறைவு: கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்றைய தினமே விலை குறைந்தது. காலையில் பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் ரூ.52,400 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.480 குறைந்த நிலையில், நேற்றும் ரூ.480 குறைந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.6,430-க்கும், ஒரு பவுன் ரூ.51,440-க்கும் விற்பனையானது. இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3.160 குறைந்துள்ளது.