Published : 03 May 2018 08:34 AM
Last Updated : 03 May 2018 08:34 AM

கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி வங்கி மோசடிகள்: 23,000 வழக்குகள் கண்டறியப்பட்டதாக ரிசர்வ் வங்கி தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 23,000 வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது ரிசர்வ் வங்கி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2017 முதல் மார்ச் 1, 2018 வரையிலான காலகட்டத்தில் 5,152 மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2016-2017-ம் ஆண்டில் இது 5,076-ஆக இருந்தது.

ஏப்ரல் 2017 முதல் மார்ச் 1, 2018 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ.28,459 கோடி ஆகும். இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய தொகையாகும். 2016-2017-ம் ஆண்டில் மொத்த மோசடித் தொகை ரூ.23,933 கோடி ஆகும்.

2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு மார்ச்-1 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ரூ.1,00,718 கோடி மதிப்புள்ள 23,866 மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவற்றுள் 2013-2014 காலகட்டத்தில் 4,306 மோசடிகளும் (ரூ.10,170 கோடி), 2014-2015 காலகட்டத்தில் 4,639 மோசடிகளும் (ரூ.19,455 கோடி), 2015-2016 காலகட்டத்தில் 4,693 மோசடிகளும் (ரூ.18,698 கோடி) கண்டறியப்பட்டுள்ளன.

குறைந்தபட்ச தொகையாக ரூ.1 லட்சம் முதல் இந்த மோசடிகள் நடைபெற்றுள்ளன. இந்த மோசடிகளில் தனிப்பட்ட வழக்குகளின் தன்மை மற்றும் சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை, வங்கி மோசடிகளை விசாரித்துவரும் நிலையில் இந்தத் தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி செய்துள்ள ரூ.13,000 கோடி மோசடி மற்றும் ஏர்செல் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனின் நிறுவனங்களுக்கு ஐடிபிஐ வங்கி ரூ.600 கோடி கடன் அளித்ததில் நிகழ்ந்துள்ள மோசடி போன்றவை இவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும்.

வாராக்கடன் அளவு

அரசு தகவல்கள்படி நாட்டின் அனைத்து வங்கிகளிலும் உள்ள மொத்த வாராக்கடன் அளவு டிசம்பர் 2017 நிலவரப்படி ரூ.8,40,958 கோடி ஆகும்.

இவற்றுள் தொழிற்துறைக்கு அளிக்கப்பட்ட கடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சேவைத் துறை மற்றும் விவசாயக் கடன் போன்றவை உள்ளன.

அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியின் வாராக்கடன் அளவு ரூ.2,01,560 கோடியாக உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் அளவு ரூ.55,200 கோடியாகவும், ஐடிபிஐ வங்கியின் வாராக்கடன் அளவு ரூ.44,542 கோடியாகவும் உள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் அளவு ரூ.43,474 கோடியாகவும், பேங்க் ஆஃப் பரோடாவின் வாராக்கடன் அளவு ரூ.41,649 கோடியாகவும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாராக்கடன் அளவு ரூ.38,047 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் வாராக்கடன் அளவு ரூ.33,849 கோடியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x