

சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ளபட்ஜெட்டை தொழில் துறையினர்வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) தலைவர் சி.கே.மோகன்: உற்பத்தித் துறைக்கு பிணையில்லா கடனுதவி வழங்கும் திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவிக்கு புதிய மதிப்பீட்டுக் கொள்கை, தொழில் நலிவடையாமல் இருக்க உதவும் புதியகொள்கை ஆகியவை வரவேற்கத்தக்கவை. எனினும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய உதவும்வகையில், தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்துக்கான மானியம் புதுப்பிக்கப்படவில்லை.
இந்திய தொழில் வர்த்தக சபையின் (சிஐஐ) தென்பிராந்திய தலைவர் டாக்டர் நந்தினி: கல்விக்கு ரூ.1.48 லட்சம் கோடி, திறன் மேம்பாடு, உயர் கல்விக்கு ரூ.10 லட்சம் கடனுதவி, 1,000 ஐடிஐ-க்களை மேம்படுத்துதல், ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
இந்துஸ்தான் தொழில் வர்த்தக சபை தலைவர் விஜய் பி.சோர்டியா: மத்திய பட்ஜெட் வளர்ச்சி சார்ந்த, தனித்துவமான மற்றும் ஜனரஞ்சக பட்ஜெட் ஆகும். குறிப்பாக, முத்ரா கடன் தொகை ரூ.20 லட்சமாக அதிகரிப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை.
இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் (ஃபியோ) தலைவர்அஷ்வனி குமார்: மத்திய பட்ஜெட்பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். குறிப்பாக, விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
தமிழ் தொழில் வர்த்தக சபைதலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர்: கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.1.48 லட்சம் கோடி, கிராம வளர்ச்சிக்கு ரூ.2.6 லட்சம் கோடி, முத்ரா கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு, ஏஞ்சல் வரி ரத்து ஆகியவை வரவேற்கத்தக்க அம்சங்கள்.
சென்னை தொழில் வர்த்தக சபை தலைவர் கேசவன்: சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கப்பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: வேளாண்மைக்கு ரூ1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு, இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் ஒரு கோடி விவசாயிகளுக்கு உதவி, 80 கோடி பேருக்கான உணவு தானிய தொகுப்பு திட்டம்நீட்டிப்பு வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில், வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம், நிரந்தர கொள்முதல் உத்திரவாதம்அறிவிக்கப்படவில்லை.