‘க்யூ ஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி: தமிழ்நாடு மின் வாரியம் அறிமுகம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்றுதான் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை முன்பு இருந்தது. பின்னர், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மின்கட்டண வசூல், மின்னணு (டிஜிட்டல்) முறைக்கு மாறியது. இதன்படி, நெட்பேங்கிங், பாரத் பில் பேமென்ட்சேவை, டெபிட், கிரெடிட் கார்டுகள், இ-சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்கள் மூலம் மின்னணு முறையில் மின்கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.

இந்நிலையில், மின்வாரிய அலுவலகங்களில் ‘க்யூஆர் கோடு’ வசதியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

மின்கட்டணத்தை தற்போது 83% நுகர்வோர் மின்னணுமுறையில் செலுத்துகின்றனர். கடந்த 2023-24-ம் ஆண்டில் மின்னணு முறையில் செலுத்தப்பட்ட கட்டணம் மூலம் ரூ.50,217 கோடி வருவாய் கிடைத்தது. முந்தையை ஆண்டைவிட இது 31 சதவீதம் அதிகம்.

குறிப்பாக, தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயர் அழுத்த பிரிவு மின்நுகர்வோர் அனைவரும் மின்கட்டணத்தை மின்னணு முறையிலேயே செலுத்துகின்றனர்.

தவிர, கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்கு 3 நாட்கள் முன்னதாக நுகர்வோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிநினைவூட்டல் செய்யப்படுகிறது. அதேபோல், கட்டணம் செலுத்தியதும் அதை உறுதி செய்து நுகர்வோருக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இதன்படி, மாதத்துக்கு 3 கோடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், ‘க்யூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் தற்போது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in