நடப்பாண்டில் ஐஆர்சிடிசி 70 சுற்றுலா திட்டங்கள்: தென் மண்டல பொது மேலாளர் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஐஆர்சிடிசி சார்பில் இந்த நிதியாண்டில் 70 சுற்றுலா திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தென் மண்டல பொதுமேலாளர் ராஜலிங்கம் பாசு தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: பிரதமரின் தேக்கோ அப்னாதேஷ் என்ற திட்டத்தின்கீழ், இந்தநிதியாண்டில் (2024-25) 70 உள்நாட்டு சுற்றுலாக்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 57 உள்நாட்டு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தென் இந்தியாவில் இருந்துவரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் கயாவில் அமாவாசை அன்று பிண்ட தானம் கொடுப்பதற்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துகொடுக்கிறது. கயா, காசி, அலகாபாத், அயோத்தியா சிறப்பு ஆன்மிக யாத்திரை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

2024-25-ம் நிதியாண்டில் செர்ரிப்ளாஸம் பருவத்தில் ஜப்பான் மற்றும் வசந்த காலத்தில் கிழக்கு ஐரோப்பா, கம்போடியா- வியட்நாமில் உள்ள அங்கோர் வாட் போன்ற 20-க்கும் மேற்பட்ட சுற்றுலாக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல், மதுரை-ராமேசுவரம், கன்னியாகுமரி- திருவனந்தபுரம், போடி, மூணாறு -தேக்கடி போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பாரத் கவுரவ் திட்டத்தில், ஐஆர்சிடிசி தென் மண்டலம் சார்பில் கடந்த நிதியாண்டில் வெவ்வேறு இடங்களுக்கு 16 ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிதியாண்டில் 20 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9003140680, 9003140682 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in