Published : 03 May 2018 08:25 AM
Last Updated : 03 May 2018 08:25 AM

40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொலைத்தொடர்புக் கொள்கை வரைவு வெளியீடு: 5ஜி பிராட்பேண்ட் சேவை அளிக்க திட்டம்

ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் உள்ளிட்ட வரிகளைக் குறைப்பதற்காகவும், தொலைத்தொடர்பு துறையின் கடனைக் குறைப்பதற்காகவும் புதிய தொலைத்தொடர்பு கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் 50 எம்பிபிஎஸ் வேகத்திலான 5ஜி பிராட்பேண்ட் சேவை அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தல், 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இந்த வரைவின் நோக்கமாக உள்ளது.

‘தேசிய டிஜிட்டல் தகவல்தொடர்பு திட்டம் 2018’ என இந்த வரைவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் தகவல்தொடர்பு துறையில் 10,000 கோடி டாலர் முதலீடுகளைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

லைசென்ஸ் கட்டணங்கள், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் சில சேவை வரிகளில் காணப்படும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதும் இந்த வரைவின் நோக்கமாக உள்ளது.

40 லட்சம் வேலைவாய்ப்புகள்

டிஜிட்டல் தொலைத்தொடர்பு துறையில் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் தொலைத்தொடர்பு துறையின் ஜிடிபி பங்களிப்பை 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபிக்ஸ்ட் லைன் பிராட்பேண்ட் சேவைகளை 50 சதவீத வீடுகளுக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

50 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட்

நாட்டின் அனைத்து மக்களுக்கும் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் சேவை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகளைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டுக்குள் 1 ஜிபிபிஎஸ் வேகத்திலும் 2022-ம் ஆண்டுக்குள் 10 ஜிபிபிஎஸ் வேகத்திலும் பிராட்பேண்ட் சேவை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிக கொள்திறன் கொண்ட ஈ-பேண்ட் மற்றும் வி-பேண்ட் அலைவரிசைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறையின் 7.8 லட்சம் கோடி ரூபாய் கடனைக் குறைப்பதற்காக ஸ்பெக்ட்ரம் கட்டணங்களில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க தேசிய பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் ஆப்டிக்கல் ஃபைபர் பயன்பாட்டை அதிகரிக்க வரைவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப அலுவலகங்கள் மற்றும் வீடுகள் இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) நிர்ணயித்துள்ள தேசிய கட்டிட விதிமுறைகள்படி (என்பிசி) அமைக்கப்பட வேண்டும் எனவும் வரைவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தவிர தகவல் தொடர்பு சேவையை விரிவாக்குவதற்காக செயற்கைகோள் தகவல்தொடர்பு திட்டத்தில் மாற்றம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவுசார் சொத்துரிமை இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x