முகப்பு கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ வில்லை ஒட்டாத வாகனங்களுக்கு இனி இரு மடங்கு கட்டணம்

முகப்பு கண்ணாடியில் ‘ஃபாஸ்டேக்’ வில்லை ஒட்டாத வாகனங்களுக்கு இனி இரு மடங்கு கட்டணம்
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும்போது முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் ஃபாஸ்டேக் வில்லை ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது அந்த வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களின் முகப்பு கண்ணாடியில், வேண்டுமென்றே ஃபாஸ்டேக் வில்லைகள் ஒட்டாமல் இருப்பதை தடுக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தில் ஃபாஸ்டேக் வில்லை ஒட்டாத வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது அந்த வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் வில்லைகளை வேண்டுமென்றே ஒட்டாமல் வருவது, சுங்கச்சாவடிகளில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துவதுடன், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு அசவுகரியங்களையும் ஏற்படுத்துகிறது. எனவே நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 45,000 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு தடையற்ற, சுகமான பயணத்தை உறுதி செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in